திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருச்சி மாவட்டம் முசிறி பூலாஞ்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் கல்குவாரி அமைக்க அனுமதி வேண்டி கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி திருச்சி கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பம் முசிறி வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டு களஆய்வு செய்து, அந்த விண்ணப்பம் மீண்டும் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு வந்தது. ஆனால் 3 மாதங்களாகியும் உதவி இயக்குனர் அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆல்பர்ட் நேரில் சென்று உதவி இயக்குனர் ஸ்ரீதரனிடம் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீதரன் நேரில் வந்து களஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு கடந்த 7-ந் தேதி முசிறி பூலாஞ்சேரி சென்று ஆல்பர்ட்டின் இடத்தை ஆய்வு செய்துள்ளார். அதன்பிறகு அவர், ஆல்பர்டிடம் கல்குவாரி அமைக்க அனுமதி தர வேண்டுமென்றால் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றும், முதலில் ரூ.3 லட்சம் முன்பணமாக கொடுத்தால் பர்மிட் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், ஆர்டர் போட்டு கொடுத்தபிறகு மீதமுள்ள ரூ.2 லட்சத்தை தரும்படி கூறி உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆல்பர்ட் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 



 

இதனை தொடர்ந்து பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி, ஆல்பர்ட் நேற்று பகல் திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு உதவி இயக்குனர் ஸ்ரீதரனிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பணத்தை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள உதவி இயக்குனர் ஸ்ரீதரனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண