திருச்சி மாநகரில் கடந்த 2 நாட்களாக விடிய விடிய மழை கொட்டிதீர்த்தது. இதேபோல் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் திருச்சி மாநகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. மத்திய பேருந்து நிலையத்தில் குளம்போல் தேங்கி நின்ற மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் காலை கழிவுநீர் அகற்றும் வாகனத்தை வைத்து அகற்றினார்கள். திருச்சி மாநகரில் பல இடங்களில் போதிய மழைநீர் வடிகால் இல்லாததாலும், பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதாலும் கடந்த 2 நாள் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்கு சாலைகள் மோசமான நிலைக்கு மாறியது. பொன்மலை, விமான நிலைய பகுதிகள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட 3-ம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காக நன்றாக இருந்த சாலைகள் எல்லாம் பள்ளம் தோண்டப்பட்டு சேதமாகி உள்ளன. இதேபோல் வயலூர் சாலையிலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு சரிவர மூடப்படவில்லை.
மேலும், சில இடங்களில் பாதாள சாக்கடை குழிகள் மூடப்பட்டாலும், வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுப்பதற்காக பணிகளை அப்படியே விட்டு விட்டு சென்றிருக்கிறார்கள். கடந்த 2 நாட்கள் நாள் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இந்த சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வெளியே எடுத்து வர முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பல இடங்களில் பாதாள சாக்கடை பணி முடிந்து புதிதாக தார் சாலைகள் போடப்பட்டுள்ளது.
மேலும், சாலை அமைக்கும்போது, பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால், தற்போது பெய்த மழைக்கு மண் இளகி பெரும்பாலான பகுதிகளில், சாலையின் நடுவில் சிறிய அளவில் பள்ளம் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் இருப்பதால் திருச்சி மாநகராட்சி பகுதி முழுவதும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். புதிதாக போடப்பட்ட சாலை கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழைக்கே தாக்குபிடிக்காமல் ஆங்காங்கே திடீர் பள்ளங்கள் ஏற்படுகிறது. இதனால் தொடர் விபத்துகளும் நடந்து வருகிறது. திருச்சி மாநகராட்சியில் போடப்பட்டுள்ள அனைத்து புதிய சாலைகளும் தரமற்றவை, சிறிதாக பெய்த மழைக்கே தாக்கு பிடிக்கவில்லை இது தொடர்பாக பலமுறை அதிகாரியிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும், அதேபோல் பாதாள சாக்கடை பணிகள், முறையாக அமைக்காததால் மழை நீர் வடியாமல் சாலை ஓரங்களில் வெள்ளம் போல் தேங்கி இருக்கிறது. மழைக்காலம் தொடங்கியதால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீர்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் முறையாக அனைத்து பணிகளையும் ஆய்வு செய்து தரமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.