திருச்சி மாவட்டம் என்றாலே திமுகவிற்கு ஒரு திருப்புமுனை என்று கூறலாம். அதை நிரூபிக்கும் வகையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக திமுக கைப்பற்றியது. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக திருச்சியில் திமுக கட்சியில் உட்கட்சி பூசல் நடைபெற்று வருவதாக தகவல் பரவி வந்தது. குறிப்பாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் ஒரு புறம், அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளர்கள் ஒருபுறம் என திருச்சி தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். குறிப்பாக திருச்சியில் திமுகவில் பதவி வழங்குவதில் பல்வேறு உட்கட்சி பூசல் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில்  திமுகவில் மத்திய மாவட்ட செயலாளராக வைரமணி, இவர்  அமைச்சர் நேருவின் ஆதரவாளர் ஆவர். மேலும் வடக்கு மாவட்ட செயலாளராக முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இருந்து வருகின்றனர்.


திமுக தெற்கு மாவட்ட செயலாளரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது அவரது மாவட்டத்தில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வரும் நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட, திமுக துணைச் செயலாளராக பதவி வகித்து வந்த அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளரான குடமுருட்டி சேகரின் பதவியை பறித்துவிட்டு தன்னுடைய ஆதரவாளருக்கு பதவி வழங்கியுள்ளதாக  அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. 




குறிப்பாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களை பதவியில் இருந்து நீக்கி, தனது ஆதரவாளர்களை நியமனம் செய்யும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இந்த செயலுக்கு கட்சியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


இந்த நிலையில் தான் "உழைப்பவனை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால் தான் பலன் உண்டு, கிடைத்தவனை கொண்டு நடத்தினால் பலனில்லை" என்ற அறிஞர் அண்ணாவின் வாசகத்துடன் குடமுருட்டி சேகர் திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மறைமுகமாக கண்டித்து பேனர் வைத்து திமுகவில் போர்க்கொடியை உயர்த்தி உள்ளார். இந்த பேனர் விவகாரம் தற்போது திமுக தலைமை வரைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதால், மாற்றம் பிறக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் திமுகவில் உள்ள தொண்டர்கள் 


இது மட்டும் இன்றி முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ அமைச்சர், திமுக இளைஞரணி மாநில செயலாளர், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் என மூன்று பதவிகளை வகித்து வருவதால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியையும் பறிக்க வேண்டும் எனவும் தலைமைக்கு திருச்சி மாவட்ட திமுகவில் இருந்து மனுக்களும் அனுப்பப்பட்டுள்ளதால் திருச்சி மாவட்ட திமுகவில் தற்போது பிரளயம் வெடித்துள்ளது என்றே கூறலாம்..