திருச்சி மாநகராட்சியில் இப்போது 65 வார்டுகள் உள்ளது. திருச்சி மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மாநகரை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த பகுதிகளை இணைத்து 100 வார்டுகள் கொண்டதாக திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை, மானிய கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.


இதனை தொடர்ந்து மாநகராட்சி விரிவாக்க பணிகளுக்காக அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்கவும், வார்டுகளை சீரமைக்கும் பணிகளையும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் பணிகளை தீவிரமாக தொடங்கினர்.


குறிப்பாக திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து, மருதாண்ட குறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், மணிகண்டம் ஒன்றியம், முடிகண்டம், மேக்குடி, கே. கள்ளிக்குடி, தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூர், திருவெரும்பூர் ஒன்றியம், பணைய குறிச்சி ,குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி கீழக்குறிச்சி, லால்குடி ஒன்றியம், தாளக்குடி, அப்பாதுரை எசனைக்கோரை, புதுக்குடி, மண்ணச்சநல்லூர் ஒன்றியம், மாதவப்பெருமாள் கோயில், பிச்சாண்டார் கோயில், கூத்தூர், ஆகிய 27 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 100 வார்டுகளாக திருச்சி மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.




திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு 


இதனை தொடர்ந்து பல்வேறு கிராம மக்கள் விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு கிராமமாக மக்களை அழைத்து கருத்து கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பல்வேறு கிராம மக்கள், மாநகராட்சி விரிவாக்கம் திட்டத்திற்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி விரிவாக்க பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. 


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாநகராட்சி விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. இதனால் மாநகராட்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 


குறிப்பாக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கிராம சபை கூட்டத்தின் போது மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு எங்கள் கிராமத்தை இணைக்க வேண்டாம் என தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.


இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை லால்குடி ஒன்றியம் மாடக்குடி ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி உடன் எங்கள் கிராமத்தை இணைக்க வேண்டாம் என கோஷங்கள் எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 




எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம், எந்த சலுகையும் வேண்டாம். 


மேலும் மாடக்குடி கிராம ஊராட்சி மக்கள் கூறுகையில்..


லால்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்கள் இன்றளவும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி விரிவாக்கத் திட்டத்தில் எங்களது கிராமத்தை இணைப்பதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர் ,இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் மாநகராட்சி உடன் எங்கள் கிராமத்தை இணைத்தால் விவசாயம் பாதிக்கப்படும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பாதிக்கப்படும், வரி உயர்வு ஏற்பட்டால் விவசாயிகளின் ஒட்டுமொத்த குடும்பமும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், இத்தகைய செயலை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவித்தனர்.


இதேபோன்று சோமரசன்பேட்டை பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டத்தில் எங்கள் ஊராட்சியை இணைக்க வேண்டாம் என கோரிக்கை மனுவை அளித்தனர். 


குறிப்பாக எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம், மாநகராட்சியின் எந்த சலுகையும் வேண்டாம்,  கிராமம் கிராமமாகவே இருக்கட்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.