திருச்சி அருகே வாத்துப்பண்ணைக்கு கடத்தி சென்ற 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவரை கைது செய்தனர்.


அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஐ.ஜி. ஜோசி நிர்மல்குமார் உத்தரவுப்படி, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சம்பவத்தன்று திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை குறிஞ்சிநகர் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுறுத்தலின்பேரில், இன்ஸ்பெக்டர் மணி மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் அடங்கிய போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வெள்ளைநிற காரில் ரேஷன்அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை காருடன் சேர்த்து பறிமுதல் செய்தனர்.


இதனை தொடர்ந்து, இந்த கடத்தலுக்கு காரணமானவர்களை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில் மணப்பாறை அருகே உள்ள வாத்துப் பண்ணைக்கு ரேஷன் அரிசி காரில் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வாத்து பண்ணையின் உரிமையாளர் மணப்பாறையை சேர்ந்த பாரதி மற்றும் கரூர் லாலப்பேட்டையை சேர்ந்த கார் டிரைவர் தமிழ்செல்வன் (33) ஆகியோர் மீது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டார்.





தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி பருக்கள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு கைது நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். தொடர்ந்து அதிகளவில் ரேஷன் அரிசி பதுக்கல் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சி மாவட்ட அதிகாரிகள் கூறும்போது: ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய புதிதாக குழு அமைக்கப்பட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.