கொடியன் மஹிஷாசுரன் தனது படையுடன் இணைந்து தேவி சாமுண்டேஸ்வரியை அழிக்கும் நோக்கத்துடன் சண்டையிட்டு வந்தான். இறுதியாக மஹிஷாசுரன் செய்யும் அக்கிரமங்களை பார்த்து, ஆக்ரோஷமாக அவதாரம் எடுத்தாள். அந்த அவதாரமே துர்கை அவதாரம். தனது கூர்வாள் போன்ற ஆயுதங்களை கொண்டு மஹிஷாசுரனை வதம் செய்தாள். இதன் காரணமாக ஆயுதபூஜை வழிப்பாடு காலம் காலமாக நடத்தப்படுகிறது என்று புராண கதைகள் சில கூறுகிறது. மேலும் பிற புராண கதைகளில், குருக்‌ஷேத்திரா போருக்கு புறப்பட்ட அர்ஜுனன், தனது ஆயுதங்களை பிரயோகித்து போர் புரிந்தார். அந்த போரில் அவர் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் 8வது நாளுக்கு பிறகு, 9வது நாளில் அனைத்து ஆயுதம், உலோகங்களால் ஆன பொருட்கள், வாகனம் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் இயந்திரங்கள் என அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து, அதற்கு குங்குமம் பொட்டு வைத்து வழிபாடு நடத்தப்படும்.


குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் புத்தகம், பேனா, பென்சில் என அனைத்தையும் சாமி படம் முன்பு குங்குமம் பொட்டிட்டு நான்கு முனைகளிலும் மஞ்சள் பொட்டு வைத்து வழிப்படுவார்கள். வண்ணம் மற்றும் வாசனை நிறைந்த பூக்களால் சாமி படங்களுக்கு/விக்கிரகங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தப்படும். பிறகு பொரி, பழங்கள், இனிப்பு என பல வகை பலகாரங்களை சாமிக்கு படையல் அளிப்பது வழக்கம்.




இந்நிலையில் நவராத்திரி விழாவில் முக்கிய நாளான ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகள், அலுவலகங்களில் பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்த நடத்துவார்கள். இதையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. வழிபாட்டிற்கு முக்கியமான பூஜை பொருட்களில் ஒன்றானது பூக்களாகும். இந்த நிலையில் ஆயுத பூஜையையொட்டி புதுக்கோட்டையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது. கடந்த வாரங்களில் ரூ.350 முதல் ரூ.500 வரைக்கும் விற்றது. இந்த நிலையில்  இரு மடங்காக அதிகரித்தது. தேபோல பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களில் முல்லை பூ கிலோ ரூ.750-க்கும், சாதி பூ ரூ.700-க்கும், செவ்வந்தி பூ ரூ.200 முதல் ரூ.250-க்கும், செண்டி பூ ரூ.70 -க்கும், அரளி பூ ரூ.500-க்கும். ரோஸ் ரூ.250-க்கும், கோழிக்கொண்டை பூ ரூ.40-க்கும் விற்றது. மொத்தமாக வியாபாரிகள் வாங்கி சென்று சில்லறை விலைக்கு பூக்களை விற்பனை செய்த போது இதன் விலை சற்று அதிகரித்திருந்தது. விலை உயர்ந்திருந்தாலும் அத்தியாவசிய தேவை என்பதால் பொதுமக்களும் பூக்களை வாங்கி சென்றனர். ஒரு சில அரசு அலுவலகங்களில் நேற்று ஆயுத பூஜையை ஊழியர்கள் கொண்டாடினர். பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் புதுக்கோட்டை கடைவீதிகளில் அதிகமாக காணப்பட்டது.