திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.


24 மணி நேர கண்காணிப்பு:


குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் திருட்டு, கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.


இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிபறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.




பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை..


பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் திருட்டு வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதை தங்களது சமூக வலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்கள்.


பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தாலோ, அல்லது அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்கள் பதிவிட்டாலோ சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. 




இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இரண்டு பேர் அதிரடியாக கைது


இந்நிலையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுமருதூர் மேம்பாலம் அருகே, கடந்த 22 ஆம் தேதி பரணிதரன், தேவனரசன், செபஸ்டின் டேனியல்  ஆகியோர் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தைச் தூக்கிகொண்டு சாகசம் செய்துள்ளனர் 


இருசக்கர வாகனத்தை அபாயகரமாக ஓட்டிச் சென்ற வீடீயோ காட்சியானது Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இது குறித்து சமயபுரம் காவல் நிலையம் குற்ற எண் 191/24, U/s 279, 290 IPC r/w 183 MV-ன் படி மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


மேலும் அன்றைய தினமே மேற்படி குற்றவாளிகளான  பரணிதரன், செபஸ்டின் டேனியல்,  ஆகியோர்களை கைது செய்து, அவர்கள் சாகசத்திற்கு பயன்படுத்திய வாகனங்களை வரை முதல் செய்யப்பட்டது.


மேலும், இனிவரும் காலங்களில் இது போன்ற சாகசங்களில் ஈடுபட்டாலோ, பயங்கர ஆயுதங்களை வைத்து விடியோ பதிவிடும் நபர்கள் மீது கடுமையபான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, வானங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


குறிப்பாக  இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண்.9487464651 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தயங்காமல் தகவல் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.