தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து. போதைப்பொட்களை தடுப்பதில் திமுக அரசு சரியாக செயல்படவில்லை, மாறாக கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு உடந்தையாக காவல் துறையும் ,மதுவிலக்கு துறையும் செயல்பட்டுள்ளது.


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.


இதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்தும், கள்ளச்சாராய மரணத்திற்கு உடனடியாக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னால் அமைச்சர்கள் பரஞ்சோதி, வளர்மதி, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன், மற்றும் அதிமுக மாவட்ட,  வட்ட, பகுதி, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துக்கொண்டனர். 




மேலும், தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் கள்ளச்சாராயம் விவகாரத்தில் முழு பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் - முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி


தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விவகாரத்தில் இறப்பு எண்ணிக்கையை திமுக அரசு மறைத்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார். மக்களுக்கான எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, ஆட்சி நடத்தி வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். 




சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிச்சாமியை பேச அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஏராளமானோர் உயிரிழந்ததை குறித்து விரிவாக பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த திமுக அரசு எப்படி செயல்பட்டு வருகிறது என்பது மக்களுக்குத் தெரியும். ஆகையால் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் போன்று இனி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது.  ஆகையால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும். விரைவில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்படும் எடப்பாடி.பழனிச்சாமி முதல்வர் ஆவார் என்பது உறுதியாகிவிட்டது என பேசினார்.




கள்ளச்சாரயம் விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார் 


இரும்பு கரம் கொண்டு கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனா தற்போது அந்த இரும்பு கரம் துருப்பிடித்து போனது. போதைப்பொருளை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சவுக்கு சங்கர், பஞ்சுமிட்டாய் விற்பனை செய்பவர், கிளி ஜோசியம் பார்ப்பவர் என அனைவரையும் சிறையில் அடைக்கிறார். ஆனால் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். 


மெத்தனால் பொருள் புதுச்சேரி, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாமல் எப்படி இது சாத்தியமாகும்.


கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்திற்கு முதல் குற்றவாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது குற்றவாளியாக காவல்துறை, மூன்றாவது குற்றவாளி அந்த மாவட்டதில் இருக்கும் திமுக நிர்வாகிகள் இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அனைத்திற்கும் தானாக முன்வந்து பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். கள்ளக்குறிச்சியில் கலாச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் இறப்பு குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.