திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் குரும்பர் தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது 55). விவசாயியான இவர் 70-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் அவர் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். அதன்பின் அவர் மாலையில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வயலில் பட்டி அமைத்து ஆடுகளை அடைத்துவிடுவார். மேலும் ராமர் ஆடுகளின் பாதுகாப்புக்காக அங்கேயே இரவில் தங்கி விடுவார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு பட்டியில் அடைத்து வைத்து விட்டு அங்கேயே கட்டிலில் தூங்கி உள்ளார். நேற்று அதிகாலை அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் தூங்கிக்கொண்டு இருந்த ராமரை சரமாரியாக தாக்கினர். இதில் வலி தாங்காமல் சத்தமிட்ட அவரை அந்த கும்பல் வாயை பொத்தி கத்தியை காட்டி கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளனர்.




இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 70 ஆடுகளில் 30 ஆடுகளை திருடிச்சென்றுவிட்டனர். 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த ராமர் தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குடும்பத்தினர் ராமரை மீட்டு சிகிச்சைக்காக இருங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமரின் மகன் வரதராஜ் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குவந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விவசாயியை தாக்கிவிட்டு ஆடுகளை திருடிச் சென்ற 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். 




மேலும் இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுகனூர் அருகே உள்ள அழுந்தலைப்பூரில் சுமார் 100 ஆடுகளை மர்மகும்பல் திருடி சென்றது. அந்த வழக்கிலும் இதுவரை ஆடு திருடியவர்கள் பிடிபடவில்லை. எனவே அந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களே ராமரை தாக்கி ஆடுகளை திருடிச் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.