திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தி.மு.க.வை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 40). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த தனபால், மணி ஆகிய மூவரும் சேர்ந்து நரசிங்கபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள பச்சைமலை பகுதியில் இருந்து, இரவு நேரங்களில் ஜே.சி.பி. உதவியுடன் செம்மண் கடத்தியுள்ளனர்.

 

கொடூர தாக்குதல்:

 

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் செம்மண் கடத்துவதாக துறையூர் வட்டாட்சியர் வனஜாவிற்கு அப்பகுதி பொதுமக்கள் செல்போன் வாயிலாக புகார் தெரிவித்தனர். இதனையடுத்து துறையூர் வட்டாட்சியர் வனஜா ரங்கநாதபுரத்தை சேர்ந்த, துறையூர் பகுதி வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. எந்திரம் மற்றும் டிராக்டரின் சாவியை எடுத்துக்கொண்டு, கிராமத்திற்குள் வந்துள்ளார். அப்பொழுது அவரை வழிமறித்த ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், தனபால், மணி மற்றும் டிரைவர் கந்தசாமி உள்ளிட்டோர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை ஆபாசமாக பேசி திட்டி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது மண்டையை உடைத்ததோடு, அவரின் முதுகு பகுதியில் கடுமையாக பற்களைக் கொண்டு கடித்தும் வைத்துள்ளனர்.

 



 

இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளரை மீட்டனர். முதலில் பெருமாள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த துறையூர் வட்டாட்சியர் வனஜா, முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்து, வருவாய் ஆய்வாளர் பிரபாகரனின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் (40), தனபால், மணி, கந்தசாமி உள்ளிட்ட 4 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

 

பெரும் அச்சம்:

 

கடந்த மாதம் தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் மணல் கொள்ளையை பற்றி புகாரளித்ததன் பேரில், அவரது அலுவலகத்திலேயே கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழக அரசிடம் கைத்துப்பாக்கி கேட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மீண்டும் அரசு வருவாய் துறையினர் மீது ஊராட்சி தலைவரும் அடியாட்களும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், அரசு அதிகாரிகள் மீதே தாக்குதல் நடத்துபவர்கள், தனிநபர்கள் புகாரளித்தால் வரும் விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். துறையூர் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண