புதுக்கோட்டை அருகே அமைந்துள்ளது பொற்பனைக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கும், அரசர் ஆட்சி புரிந்ததற்கான நிர்வாக அமைப்புகளுக்கான அடையாளங்களும், தொல்லியல் சார்ந்த பொருட்களும் தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கள ஆய்வின் போது கண்டெடுக்கப்பட்டது. இந்த கோட்டையானது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. கீழடி, ஆதிச்சநல்லூரில் கிடைத்தவை போன்ற அதே தன்மையுடைய கூரை ஓடுகள் உள்ளிட்டவை பொற்பனைக்கோட்டையிலும் கிடைத்தன. இதையடுத்து தமிழக அரசின் தொல்லியல் துறையே பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியை சமீபத்தில் தொடங்கியது. இதில் தொல்லியல் துறையினர், தொல்லியல் படிக்கும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த அகழாய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். பொற்பனைக்கோட்டையில் தெற்கு பகுதியில் குறிப்பிட்ட அளவிலான இடத்தில் முதற்கட்டமாக மண் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் 7 முதல் 19 செ.மீ. ஆழத்தில் செங்கல் கட்டுமானம் இருந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

 



 

மேலும் இதுகுறித்து தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், ''பொற்பனைக்கோட்டையின் அரண்மனை மேட்டுப்பகுதியில் ஏற்கனவே ஆம்போரா அடிப்பாகம், கூரை ஓடுகள், பல்வேறு வகையிலான மணிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகும். ஆய்வு தொடரும்போது தமிழகத்திற்கும், இந்திய வரலாற்றுக்கும், புதிய வெளிச்சத்தை இந்த அகழாய்வு தரும் என்று நம்புகிறோம்'' என்றார்.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண