திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி பகுதியில் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களது பூர்வீககுடி முருகன் கோவில் ராமச்சந்திர நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் நத்தம் புறம்போக்கு என்று அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ராமச்சந்திரன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து எடமலைப்பட்டி பொதுமக்கள் ஆண்டாண்டு காலமாக அந்த முருகன் கோவிலை பராமரித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சமூக விரோதிகள் அதிக அளவில் கோவில் வளாகத்தில் தவறான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய நடவடிக்கையை முழுமையாக தடுத்திட வேண்டும் என்று எடமலைப்பட்டி பகுதி மக்கள் ஒன்றிணைந்து நிதியை திரட்டி கோவில் வளாகத்தை சுற்றி சுற்றுசுவர் அமைக்கும் பணியை தொடங்கினர்.
இந்தப் பணிகள் அனைத்தும் முறைப்படி நீதிமன்ற அனுமதி பெற்று நடைபெற்று வந்துள்ளது. ஆனால் அந்த சுற்றுச்சுவரை கட்டக்கூடாது எனவும் கட்டிய சுவரை ராமச்சந்திர நகர் மக்கள் இடித்து விட்டதாகவும் குற்றம் சாட்டி இன்று எடமலைப்பட்டி புதூர் மேம்பாலம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி பொதுமக்களிடம் கேட்டபோது "கோவில் வளாகத்தில் நடைபெறக்கூடிய தவறான செயல்களை தடுப்பதற்காக அரசு அனுமதி மற்றும் நீதிமன்ற அனுமதி பெற்று சுற்றுசுவர் அமைக்கும் பணியை நாங்கள் தொடங்கினோம். ஆனால் ராமச்சந்திர நகர் பகுதியில் ஒரு சில மக்கள் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு எதிர்த்து வருகிறார்கள். இது குறித்து காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுபா அவர்களிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாமன்ற உறுப்பினர் சுபா மற்றும் அப்பகுதி அரசு அதிகாரிகள் அனைவரும் ராமச்சந்திர நகர் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் ஏதோ ஒரு சில காரணத்திற்காக கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பதற்கு அனுமதி மறுத்து வருகிறார்கள். எங்களுடைய பூர்வீக குடி கோவிலான முருகன் கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் முறையாக அதை பராமரிக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய கோரிக்கை. இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 57 வார்டு கவுன்சிலர் முத்துசெல்வம் தாமாக முன்வந்து ,பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். பின்பு 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட வில்லை. உடனடியாக தனது மாமன்ற உறுப்பினர் அலுவலக கடிதத்தில் உங்களுகைய பிரச்சனையை நான் முன் நின்று தீர்த்துவைக்கிறேன் என்று தனது கைபட எழுதி கொடுத்தார். இந்த விவகாரத்தில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நானே முன் நின்று மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று உறுதி அளிதத பிறகு மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேசுகையில்.. நாங்க ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த கவுன்சிலர் எங்களை கண்டுக்கொள்ள வில்லை. ஆனால் எங்களுடைய வார்டு பிரச்சினையை , தனது வார்டு மக்களின் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு கவுன்சிலர் முத்துச்செல்வம் எங்களுக்கு ஆதரவு அளித்தது மகிழ்ச்சி என்றனர்.