திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடி கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. சார்பில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் எம்.ஜி.ஆர். சிலையின் வலது கையை உடைத்தும், இடுப்பு பகுதியில் சேதப்படுத்தியும் உள்ளனர். நேற்று அந்த வழியாக சென்ற அ.தி.மு.க.வினர் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் மாவட்ட நிர்வாகிகள் உள்பட மற்ற நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரெட்டிமாங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் புள்ளம்பாடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சிவக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 




மேலும், பேச்சுவார்த்தையில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.