தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே தூய்மையான மாநகரம் என திருச்சி மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு முதலிடம் கொடுத்துள்ளது. இதற்காக டெல்லி சென்று விருது பெற்று திரும்பிய மாநகராட்சி மேயர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...


திருச்சி மாவட்டம் மாநிலத்தின் மையப் பகுதியாக இருப்பதால் இதனை முன்னோடி மாநகரமாக உருவாக்க வேண்டும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திருச்சி மாநகராட்சி பொருத்தவரை போக்குவரத்து நெரிசல், குடிநீர் பிரச்சனை இல்லாமலும், குப்பை இல்லாத மாநகராட்சியை உருவாக்கவும், பாதாள சாக்கடைகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் மாநகராட்சி சார்பில் பெரும் முயற்சி எடுத்து இருக்கிறோம்.கடந்த வருடம்  திருச்சி மாநகராட்சியை முன்னோடி மாநகரமாக கொண்டு வந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடம்  சுதந்திர தினத்தன்று விருது பெற்று 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு மருத்துவ செலவு மற்றும் கல்வி செலவுக்காக  டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இந்த ஆண்டும் ஸ்வச் பாரத் மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டுக்கான தூய்மையான நகரம் என்ற பட்டியலில் திருச்சி மாநகராட்சிக்கு முதலிடம் கொடுத்து ஒன்றிய அரசு விருது வழங்கி உள்ளது .இதை டெல்லி சென்று பெற்று கொண்டு வந்தோம் என்றார்.


இது எங்களுக்கு உந்துதல் சக்தியாக இருக்கிறது.  கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் திருச்சி மாநகராட்சியில் எதுவும் செயல்படுத்தவில்லை. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் ஒப்புதலோடு நிதியைப் பெற்று திருச்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எனவே அடுத்த வருடத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே சிறந்த மாநகரமாக திருச்சி மாநகரம் உருவாக முயற்சி எடுப்போம்.




திருச்சி மாநகராட்சியில் மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் டெல்லியில் சென்று தமிழகத்திலேயே தூய்மையான மாநகரமாக திருச்சி மாநகராட்சி பரிசு பெற்றுள்ளது. இதற்காக மாநகராட்சி மக்களும், துப்புரவு பணியாளர்களும், மாநகராட்சி ஊழியர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். 


மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை (DPR) போடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு அதற்கான பணிகள் தொடங்கும். திருச்சி மாநகராட்சியுடன் 24 ஊராட்சிகள்  8 மாநகராட்சிகள் இணைய இருக்கின்றன.  அப்படி இணையும் போது விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சியாக மாறும் போது மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். பஞ்சப்பூர் பேருந்து நிலையம் முழுமையாக நிறைவடைந்த பிறகே திறக்கப்படும். இன்னும் மூன்று மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக  தெரிவித்தார்.