திருச்சி என்றாலே பல அடையாளங்கள் உள்ளது அதில் மிக முக்கியமான அடையாளமாக இருப்பது காந்தி மார்க்கெட் ஆகும். காந்தி மார்க்கெட் வரலாறு மிக நீண்டது... காந்தி மார்கெட்டின் கட்டுமானப் பணிகள், கடந்த 1867-ம் ஆண்டு துவங்கி 1868ல் முடிந்தது. அதன்பின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, 1927-ம் ஆண்டு மார்கெட் விரிவுபடுத்தப்பட்டது. முழுமையான 1934-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது.


நீதிக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த ரத்தினவேல் தேவர் கடந்த 1924 முதல் 1948 வரை திருச்சி நகராட்சி தலைவராக இருந்தார். அவர் தலைவராக இருந்த 1934-ம் ஆண்டு காந்தியடிகள் திருச்சி மார்கெட்டை திறந்து வைத்தார். இப்போது அவரின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. 6.25 ஏக்கர் நிலப்பரப்பளவு கொண்ட இந்த மார்கெட்டில், தற்போது 2ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறை, தரைகடை, வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது மார்கெட் பகுதியைச் சுற்றி பழ மண்டி, வெங்காய மண்டி, வாழை மண்டி, உருளை மண்டி, மீன் மார்கெட், என மொத்தம் 25 ஏக்கர் பரப்பளவில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.




திருச்சி மட்டும் அல்லாமல் மத்திய மண்டலத்தில் இருக்க கூடிய பெரு நகரங்கள், கிராமங்களில் இருந்து தினம்தோறும் மக்கள் மொத்தமாக, சில்லறையாக பொருட்களை வாங்கி செல்கிறார்கள். மேலும்  நகரில் அதிகரித்துவிட்ட மக்கள் தொகை பெருக்கம், வாகனங்கள், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த காந்தி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 


மேலும் இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:


காந்தி மார்கெட் 25 ஏக்கரில் 800 மொத்த வியாபாரிகள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள், தரைகடை வியாபாரிகள் எனப் பயன்படுத்தி வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு சுமார் 300 லாரிகள் வந்து செல்கிறது. 200க்கும் அதிகமான சிறிய அளவிலான வாகனங்கள் உள்ளே வந்து செல்கிறது. அதில் 30 முதல் 35 டன் வரை காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. சுமார் 700 மூட்டைகள் கொண்டு வரப்படுகிறது. தற்போது ஒவ்வொருத்தரும் வைத்துள்ள கடையில் அளவு 2 ஆயிரம் சதுர அடி உள்ளது. அதில் விற்பனைகள் போக மீதமுள்ள 30 சதவீத காய்கறிகளை தினமும் இருப்பு வைக்க வேண்டிய நிலை உள்ளது.


குறிப்பாக காந்தி மார்கெட் பகுதியில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் 4 ஆயிரம் பேர் உள்ளனர்.  இங்குள்ள சில்லறை மற்றும் தரைக்கடை வியாபாரிகளான நாங்கள் இங்கேதான் இருப்போம் வேறு இடத்திற்கு மாற்றினால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தொடர்ந்து வியாபாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.




இந்நிலையில் மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, புதிய மார்க்கெட் கட்டி தரப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பகுதியில் காய்கறி சந்தை, மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்வதற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள்  சந்தை 80 சதவீதத்திற்கு மேற்பட்ட பணிகளும் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


இதனை தொடர்ந்து விரைவில் காந்தி மார்க்கெட் சந்தையை பஞ்சப்பூர் பகுதிக்கு மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தற்போது உள்ள காந்தி சந்தையில் அரசு துறை அலுவலகங்கள் மற்றும் சில்லறை வணிகக் கடைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றப்பட்டவுடன் காந்தி மார்க்கெட் இடிக்கப்பட்டு புது பொலிவுடன் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாக மாநகராட்சி பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது போல் காந்தி சந்தை முழுவதும் இடம் மாறுகிறது என்பது உறுதியாகி விட்டது.