திருச்சி மாநகர், கொள்ளிடம் ஆற்றில் தற்பொழுது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்தில் திறந்து விட்டு உள்ளதால், பழைய இரும்பு பாலம் உடைக்கப்பட்டு அதில் கீழே சிமெண்ட் கட்டைகள் ஆற்றில் கிடைக்கிறது.
தண்ணீர் ஓடுவதால் அது தடுப்பணை போல் குளிப்பதற்கு சிறு அருவி போல் கொட்டி வருவதால் குளிக்க ஆசையாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் அங்கே குளிக்க வர துவங்கி விட்டனர்.
மேலும், அனைவரும் கொள்ளிடம் ஆற்றில் குதித்து நீராடுவதை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பள்ளி சிறுவன் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக இறந்தார். இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சிறுவன் உடல் மீட்கபட்டது. அதே போல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூதாட்டி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் யாரும் குளிக்க செல்ல கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தொடரும் சோகம்
இந்நிலையில் திருச்சி உய்யக்கொண்டான் திருமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (43). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர் ராஜு என்பவருடன் சேர்ந்து கொள்ளிடம் ஆற்றில் மது அருந்திவிட்டு இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று விநாயகமூர்த்தி தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விநாயகமூர்த்தியை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து இறப்பு சம்பவம் நடந்து வருகிறது. இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருச்சி மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கொள்ளிடம் ஆற்றில் சிறுவன் மூழ்கிய பகுதியில் 50 அடியில் இருந்து 80 அடி வரை ஆழம் நிறைந்த பகுதியாக இருக்கிறது.
தொடர்ந்து வரும் பொதுமக்களுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும், யாரும் கண்டுகொள்ளாமல் அங்கே குளிக்க வருகின்றனர்.
கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரிக்கும்போது பொதுமக்கள் யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு முறையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் ஆங்காங்கே அதிக பள்ளங்கள் உள்ளது. நீர்வரத்து அதிகமாக செல்லும்போது அந்த பள்ளங்கள் நமக்கு தெரிவதில்லை, விளையாட்டு மோகத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் குளிக்க செல்லும்போது தவறுதலாக நீரில் மூழ்கி விடுகிறார்கள்.
குறிப்பாக தற்போது சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிடுவது இளைஞர்கள் மத்தியில் ஒரு மோகம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்யும் நோக்கத்தோடு இதுபோன்ற தவறான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் காவேரி, கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரிக்கும்போது மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுமக்கள் அது அலட்சியப் போக்கில் எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.