தமிழகத்தில் நகர்புறங்களில் சொத்து மற்றும் தண்ணீர் வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி பகுதியிலும் இந்த வரி உயர்வு அமல்படுத்தப்பட்டது. 2022-23 நிதி ஆண்டுக்கான சொத்து வரி வசூலில் திருச்சி மாநகராட்சி சாதனை படைத்துள்ளது. சென்னைக்கு அடுத்த படியாக திருச்சி மாநகராட்சியில் 42 சதவீத சொத்து வரி வசூலை நடப்பு மாத இரண்டாவது வாரத்திலேயே முடித்துள்ளனர். திருச்சி மாநகராட்சி பொருத்தமட்டில் வரி சீரமைப்புக்கு பின் 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2023 மார்ச் மாதத்திற்குள் நிலுவைத் தொகை உட்பட ரூ. 162 கோடி வசூலிக்க வேண்டும். இதில் தற்போது ரூ. 68 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் ஆவடி மாநகராட்சி 38 சதவீதமாகவும், கோவை மாநகராட்சி 35 சதவீதமாகவும், மதுரை மாநகராட்சி 33 சதவீதமாகவும், தாம்பரம் 32 சதவீதமாகவும் பின் தங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் நடந்த நகராட்சி நிர்வாக ஆய்வு கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். திருச்சி மாநகராட்சியில் வரி சீரமைப்புக்கு முன்பு சொத்து வரி ரூ. 61.2 கோடியாகவும், சீரமைப்புக்கு பின் ரூ. 108.9 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் வருவாய் ரமேஷ் குமார் கூறும் போது, சொத்துவரி செலுத்துமாறு அதன் உரிமையாளர்களுக்கு பில் கலெக்டர்கள் மூலம் நேரடியாக நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது. மேலும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒரு சில பொதுமக்கள் திருத்தி அமைக்கப்பட்ட சொத்து வரியை தாமாக முன்வந்தும் நிலுவையை செலுத்தியுள்ளனர். மேலும் நிர்ணயிக்கப்பட்ட தொழில்வரி ரூ.9 கோடியில் 74 சதவீதமும், தண்ணீர் வரி ரூ. 25 கோடியில் 38 சதவீதமும், இதர வருவாயில் ரூ. 8.8 கோடியில் 37 சதவீதமும், பாதாள சாக்கடை டெபாசிட் தொகை ரூ. 10 கோடியில் 34 சதவீதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்