தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் முக்கிய நகரங்களில் ஒன்று திருச்சி. திருச்சி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காவிரி, கொள்ளிடம் ஆறுகள் தான். இந்த ஆறுகளில் இருந்து பிரிந்து ஓடும் தண்ணீர் டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களுக்கும் விவசாயம் செய்வதற்கு உயிர் நாடியாய் காலம் காலமாக இருந்து வருகிறது. விவசாயத்திற்கும் குடிநீர் ஆதாரத்திற்கும் ஆண்டாண்டு காலமாக மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கும், ஆறுகளில் இந்த ஆண்டு ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் பாலைவனமாக காட்சியளிப்பது, விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எப்போதுமே பருவ மழை காலங்களில் மழை அதிகமாக பெய்வதும், மேட்டூர் அணையில் இருந்து நீர்வரத்து அதிகரித்து திறக்கப்படுவதனால் அந்த தண்ணீர் காவிரி, கொள்ளிடம் வழியாக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை, சாகுபடி மற்றும் மற்ற சாகுபடி பயிர்களை உருவாக்கி தங்களுடைய விவசாயங்களை பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருந்தது . ஆனால் இந்த ஆண்டு பருவ மழை திருச்சி மாவட்டத்தில் ஒரு சொட்டு கூட பெய்யவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே சமயம் மேட்டூர் அணையில் இருந்து முறைப்படி திறக்க வேண்டிய தண்ணீரும் திறக்கப்படாததால் , இந்த ஆண்டு விவசாயிகள் அனைவரும் மிகுந்த நஷ்டத்தில் , வாழ்வாதாரம் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஆண்டும் இல்லாத இந்த ஆண்டு காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வறண்டு போய் பாலைவனமாக மாறி உள்ளதை பார்க்கும்போது மனது பதப்பதைக்கிறது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.




காவிரி, கொள்ளிடம் ஆறு பாலைவனமாக காட்சியளிக்கிறது


இந்நிலையில் கோடை வெப்பம் அதிகரித்துவரும் சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை, ஒரு காலத்தில் காவிரிக்கரைகள் மிகவும் செழித்திருந்த நிலையில், தற்போது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் மிகவும் வறண்டு காணப்படுகின்றது. திருச்சி மாவட்டத்திற்கு மேட்டூரில் இருந்து வரக்கூடிய தண்ணீர், முக்கொம்பு மேலணைக்கு வந்தபிறகு, காவிரி கொள்ளிடம் என இரண்டாக அதைப் பிரித்து அனுப்புவார்கள். ஏனெனில் இங்கு அணையோ அல்லது தண்ணீரை தேக்கிவைக்கும் வசதிகளோ கிடையாது. மேட்டூரில் இருந்து வரக்கூடிய நீரை பிரித்துமட்டுமே அனுப்பமுடியும். அவ்வாறு காவிரி ஆற்றில் சுமார் 60,000 கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 3.5 லட்சம் கன அடி நீரும் பிரித்து அனுப்பமுடியும். ஆனால் தற்போதைய சூழலில் காவிரி ஆற்றில் 178 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்படுகிறது.இந்த நீர்தான் திருச்சி மாவட்ட மக்களுக்கு அடிப்படை நீராதரமாக விளங்கிறது என்பதால், திருச்சியில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறாது.




மேலும், திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு இயல்பை விட மழைப்பொழிவு குறைவாகவே இருந்தது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை திருச்சி மாவட்டத்தில் 192 (342.1) மழை அளவு பதிவாகியுள்ளது. இதன்படி பார்த்தால் திருச்சியில் 44% இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது. மழை அளவு குறைந்ததன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் 1.42 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. அதாவது திருச்சி மாவட்டத்தில் 3.99 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், 5.41 மீட்டர் ஆழத்திற்கு சென்று விட்டது. இப்படியாக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு, மழை அளவு குறைவு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு ஆகியவை ஏற்பட்டுள்ளன. இதே நிலை இன்னும் நீடிக்கும் பட்சத்தில் திருச்சியில் வரலாறு காணாத அளவிற்கு மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.