திருச்சி மாநகரின் மிக வேகமாக வளர்ச்சி பெறும் பகுதியாக இருந்து வருவது கே.கே.நகர். இதன் ஒரு பகுதியான ஆசாத் நகரில் அதிக அளவில் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசாத் நகர் முதல் தெருவில் வசித்து வரும் பாண்டியன் என்பவரது மனைவியின் கழுத்தில் இருந்து மர்ம நபர் செயினை பறித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு செயின் பறித்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆசாத் நகர் முதல் தெருவில் வசித்து வரும் தங்கராஜ் என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார். இவரது மனைவி சரோஜா (70). கணவர் மறைவுக்கு பிறகு சரோஜா, தனது மகன் பாலமுருகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். முன்னதாக தான் வசித்த திருச்சியில் உள்ள வீட்டை பாதுகாப்பதற்காக ஐயப்பன் நகர் பகுதியை சேர்ந்த பணிப்பெண் ஒருவரை நியமித்து தனது வீட்டினை பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த பெண் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு வந்து வீட்டினை பார்த்து விட்டு சென்றிருந்தார். நேற்று மாலை மீண்டும் வீட்டினை பார்க்க வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த பணிப்பெண் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.




அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த நகை திருடப்பட்டு இருந்ததை அறிந்து அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த துணிகள் அனைத்தும் சிதறிய நிலையில் இருந்ததை ஆய்வு செய்த காவல்துறையினர் இதுகுறித்து அமெரிக்காவில் இருக்கும் சரோஜாவிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த தொடர் கொள்ளை சம்பவம் ஆசாத் நகர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது.. திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. இந்நிலையில் கே.கே. நகர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நிகழ்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் அப்பகுதிகளில் கூடுதல் காவல்துறையினரை பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும் அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்களை அனைத்து வீடுகளிலும் பொருத்துமாறு கேட்டுள்ளோம் என்றார். அது மட்டும் அல்லாமல் சந்தேகம்படும்படி யாராவது தெரிந்தால் அவர்களை அழைத்து விசாரனை நடத்தி வருகிறோம், ஆகையால் பொதுமக்கள் அச்சபட தேவையில்லை என தெரிவித்தனர். மேலும் எதுவாக இருந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுனர். 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.