திருச்சி மாவட்டம்  தா.பேட்டை அருகே உள்ள அஞ்சலம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (55). விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (50). இவர்கள் அப்பகுதியில் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகன் பிரசாந்துக்கு திருமணமாகி, அதே கிராமத்தில் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் தோட்டத்து கிணற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக வெங்கட்ராமனுக்கும், அவரது அண்ணனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக வெங்கட்ராமனும், சரஸ்வதியும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் அவர்களை உறவினர்கள் சமாதானப்படுத்திய நிலையில், கடந்த 4 மாதமாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், வெங்கட்ராமன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து சரஸ்வதியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 



 

மேலும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு புதிய மின் இணைப்பு வாங்க மனைவியிடம் வெங்கட்ராமன் பணம் கேட்டுள்ளார். ஆடுகள் விற்று பணம் வைத்திருந்த சரஸ்வதி, வெங்கட்ராமனுக்கு பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி பணம் தராததால் ஆத்திரம் அடைந்த வெங்கட்ராமன் நேற்று  முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி சரஸ்வதியின் கழுத்தில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் வெங்கட்ராமன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை பால் கறப்பதற்காக சென்ற பால்காரர், வெங்கட்ராமன் தூக்கில் தொங்குவதையும், சரஸ்வதி கொலை செய்யப்பட்டு கிடந்ததையும் பார்த்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அஞ்சலம் மேலூர் கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால், இருவரது உடல்களையும் காவல்துறைக்கு  தெரியாமல் தகனம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர். 

 



 

இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி காவல்துறை துணை சூப்பிரண்டு அருள்மணி, தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கட்ராமன், சரஸ்வதி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தா.பேட்டை காவல்துறையில்  பிரசாந்த் அளித்த புகாரின்பேரில்  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தா.பேட்டை அருகே குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.