பெரம்பலூர் அருகே எசனை 4 ஆவது வார்டுக்கு உட்பட்ட தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்த செல்வராஜ்- பேச்சாயி தம்பதிக்கு சிந்துஜா (20), மகாலட்சுமி (15), இதன்யா (9) ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.   இந்நிலையில்  வயிற்று வலி காரணமாக இரண்டாவது மகள் மகாலட்சுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

 


 

தாய் பேச்சாயி வழக்கம்போல் காலையில் கூலி வேலைக்கு சென்று விட்டார். தங்கை இதன்யா காலையில் பள்ளிக்கும், அக்காள் சிந்துஜா மதியம் கல்லூரிக்கும் சென்று விட்டனர். இதனை தொடர்ந்து மகாலட்சுமி தொடர்ந்து கடுமையான வயிற்று வலியால் அவதிபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் அவரது தந்தை செல்வராஜ் கடைவீதிக்கு சென்று டீ குடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, மின்விசிறியில் கட்டில் கட்டும் கயிற்றில் மகாலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

 


இதனை கண்டு கதறி அழுத செல்வராஜ் இதுகுறித்து அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து மாணவி மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரனையை மேற்கொண்டுள்ளனர். மேலும் தற்கொலைக்கு வயிற்று வலி தான் காரணமா, இல்லை வேறு ஏதாவது காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணையை காவல்த்துறையினர்  நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050