தமிழகத்தில் தொடர் விடுமுறையை ஒட்டி திருச்சி மெயின்கார்டு கேட் அருகே மேலப்புலிவார்டு சாலை நேற்று முன்தினம் பரபரப்பாக இருந்தது. தனியார் துணிக்கடைகள் வாசலில் சிறு சிறு பொம்மைக் கடைகள் மற்றும் பலூன் வியாபாரிகள் பரபரப்பாக விற்பனை நடத்தி வந்தனர். இப்படியும் ஒரு பெரும் விபத்து நடக்கும் என அங்கிருந்தவர்கள் யாரும் அதுவரை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். துணிக்கடை வாசலில் பரபரப்பாக பலூன் விற்பனை செய்து வந்த வட மாநில இளைஞரிடமிருந்து 'டமார்'ன ஒரு பெரும் வெடிச் சத்தம். ஒரு கணப்பொழுதிற்குள் அந்த இடத்திலிருந்தவர்கள் அலறியபடி அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். மேலும் துணிக்கடைகளின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. அங்கிருந்த ஆட்டோ ஒன்று உடைந்து நொறுங்கியது. இருசக்கர வாகனங்கள் சிலவும் சேதமடைந்தன. வெடிச் சம்பவத்தால் சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் சிதறி உயிரிழந்து கிடந்தார். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அலறியபடி நின்றிருந்தனர். உடனே அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி விசாரணையில் இறங்கினர். முதலில் ஆட்டோவில் இருந்த சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. ஆட்டோ சிலிண்டர் வெடித்திருந்தால் தீப்பற்றியிருக்கும். எனவே, அது காரணமில்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகு தான் பலூன்களுக்காக வைத்திருந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்ததே விபத்திற்குக் காரணம் என்பது தெரியவந்தது. பலூன் விற்பனை செய்தவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனார்சிங் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், அவர் அனுமதியில்லாமல் ஹீலியம் சிலிண்டரை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் அனார் ரவி உயிர் தப்பியிருக்கிறார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இதனை தொடர்ந்து இந்த விபத்தில் உயிரிழந்தவர் கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்கிற மாட்டு ரவி என தெரியவந்துள்ளது. மாட்டு ரவி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் ஒரு ரெளடி என்றும் சொல்கின்றனர். மேலும், மொத்தமாக காயமடைந்த, 22 பேர் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் வெளிப்புற நோயாளிகளாக சிசிச்சை பெற்று, 16 பேர் வீடு திரும்பிய நிலையில், 6 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். ஜவுளி எடுக்க வந்த தஞ்சையை சேர்ந்த ஒரு தம்பதிகளின் ஆறு மாத குழந்தை, இன்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. சிலிண்டர் வெடித்த இடத்தில், தடயவியல் துறை ஏடிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்திய, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பலூன் வியாபாரி அனார்சிங் (31) என்பவர் மீது கோட்டை போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பலூன் விற்பனை செய்தவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த ஜீவானந்தம் என்ற சிறுவன் மட்டும் மிக மோசமான நிலையில் உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தொடர் விசாரனையில் வடமாநில பலூன் வியாபாரியான அனார் சிங்கை கோட்டை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, "கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பே திருச்சிக்கு வந்து விட்ட அனார் சிங், தனது குடும்பத்துடன் பழைய மதுரை சாலை வள்ளுவர் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழகத்தில், கோயில் திருவிழாக்கள், மிகப் பெரிய விசேஷங்கள் நடக்கும் இடங்களுக்கு சென்று பலூன் விற்பதே இவரது வேலை. ஊரெல்லாம் சுற்றிவிட்டு, கடந்த, 15 நாட்களுக்கு முன்புதான் திருச்சி வந்துள்ளார். ஹீலியம் வாயு எப்படி தயாரிப்பது என்பதை ஹைதராபாத்தில் இருந்தபோது கற்றுக் கொண்டது தெரிய வந்துள்ளது. தன்னிடம் உள்ள பழைய சிலிண்டரில் கசிவு இருந்திருக்கலாம். சிலிண்டர் அருகே யாராவது தீக்குச்சி பற்ற வைத்ததாலோ, பீடி, சிகரெட் குடித்ததாலோ சிலிண்டர் வெடித்திருக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.