திருச்சி மாவட்டத்தில் மலைக்கோட்டை என்றாலே தமிழகத்தில் அனைவரும் அறிவர். ஆனால் மலைக்கோட்டையை மிஞ்சும் அளவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது தான் அரியமங்கலம் குப்பை கிடங்கு ஆகும். ஆங்கிலேயர் காலத்தில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட ஒரு குப்பை கிடங்கு என்றால் அது அரியமங்கலம் குப்பைக்கிடங்கு தான். ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரியமங்கலம் குப்பைக்கிடங்கு தினசரி திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஏற்படும் கழிவுகளை கொட்டுவதற்கு தொடங்கப்பட்ட குப்பை கிடங்காக இருந்தது. அப்படி கொட்டபடும் கழிவுகளை பூமியில் புதைத்து சில மாதங்களுக்கு பிறகு விவசாய நிலத்திற்கு உரமாக விற்கபடுவது தான் இதன் சிறப்பு ஆகும். இந்த உரத்தை  வாங்குவதற்கு விவசாயிகள் வரிசை கட்டி நிற்பார்கள். இப்படி பல விவசாயிகள் இந்த கழிவுகளை வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்கள் சேர்ந்து குப்பைகளின் கோட்டையாக திகழ்கிறது அரியமங்கலம் குப்பை கிடங்கு..


திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கு என்பது  47.7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் குப்பையின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து சராசரியாக 40 அடி உயரத்திற்கு குப்பைமேடாக மாறிவிட்டது. உயர்ந்த மலை போல் காட்சியளித்த இந்த குப்பை மேட்டில் வெயில் காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் அந்த தீயையும் அதில் இருந்து வெளியேறும் புகையையும் கட்டுப்படுத்த தீயணைப்பு படை வீரர்களும், மாநகராட்சி,  வருவாய் துறை ஊழியர்களும் வாரக்கணக்கில் கடுமையாக போராடுவார்கள். அந்தக் காலகட்டத்தில் குப்பை கிடங்கை சுற்றியுள்ள மக்கள் அகதிகளாக தங்களது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைவார்கள். அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் குடியிருப்பு வாசிகளுக்கு அலர்ஜி உள்ளிட்ட தோல் நோய்களையும்,  மூச்சு திணறலையும் ஏற்படுத்தும். குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கிடங்கை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீரை முற்றிலுமாக மாசுபடுத்திவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 






இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 49 கோடி ரூபாய் செலவில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை 100% மறுசுழற்சி செய்யும் பணி தொடங்கப்பட்டது. அப்பணியை தனியார் நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்தது. பின்னர் புதிதாக பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசும்,  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவும், அந்தத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்கள். அதன் விளைவாக சுமார் 65 விழுக்காடு குப்பைகள் மறுசுழற்சி செய்வதற்காக பிரிக்கப்பட்டுவிட்டன. அவை கிடங்கில் இருந்து தினமும் அகற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள எஞ்சிய 35 விழுக்காடு குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.  தினசரி குப்பைகள் வந்து குவிவதால் அதனை மறுசுழற்சி செய்வதற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தனியார் நிறுவனம் வலியுறுத்துகிறது.





மேலும் இது குறித்து விரிவான திட்ட அறிக்கையை திருச்சி மாநகராட்சி தமிழக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார். இங்கு வரக்கூடிய குப்பைகளில்  பாட்டில்கள், டயர், பிளாஸ்டிக், செருப்புகள்  உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. மக்கிய மண் துகள்கள் தனியாக பிரிக்கப்படுகிறது. மேலும் மண் துகள்களை பள்ளங்களை நிரப்புவதற்காக அனுப்பி வைக்கின்றனர். மற்றவற்றை மறுசுழற்சி செய்வதற்காக அனுப்புகின்றனர்.  எனவே மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும், நுண் உர செயலாக்க மையத்தை உருவாக்கி, அந்தந்த பகுதி குப்பைகளை தொடக்க நிலையிலேயே தரம் பிரித்து மறுசுழற்சி செய்வதுதான் இந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண