தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பது போல் திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறைக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. முறுக்குக்கு பெயர் போன ஊரில் மாட்டுச்சந்தைக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. பழைய திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி ஒரு பாடலில் மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏருபூட்டி என்று கூறியிருப்பார். அத்தகைய பிரசித்தி பெற்ற மணப்பாறை சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் உள்ள கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை என பெரும்பாலான மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச்செல்வார்கள். கறவை மாடுகள், உழவு மாடுகள், நாட்டுப் பசுக்கள் என ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும். இது மட்டுமின்றி செவ்வாய் மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை சுமார் 3 முதல் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும். 




மேலும் இந்த சந்தையில் கன்றுக்குட்டி முதல் களத்தில் சீறிப்பாய்கின்ற காங்கேயம், புலிக்குளம் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு காளை வரை மாடுகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் போட்டி போட்டு வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். உழவு மாடு வாங்க ஒரு பகுதியில் அலை மோதுகின்ற கூட்டம், வண்டி மாடு வாங்க மற்றொரு கூட்டம், ஜல்லிக்கட்டு காளைகள் வாங்க இளைஞர்கள் கூட்டம் ஒரு புறம், கறிக்கு மாடுகளை வாங்க ஓடும் ஒரு படை என அவரவர் வந்த வேலைகளில் மும்முரம் காட்ட சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக மாட்டுச்சந்தையில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. குறைந்த விலைகளில் தங்களுக்கு தேவையான மாடுகளை எளிமையாக வாங்கிட முடியும் என்பதுதான் மணப்பாறை சந்தைக்கு உள்ள மற்றொரு சிறப்பு. பெரும்பாலோனார் மாடுகளை வாங்கி செல்வார்கள். இதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு சந்தைகளுக்கும் இங்கிருந்து தான் மாடுகளை வாங்கிக் கொண்டு விற்பார்கள். மாடுகளின் ரகத்திற்கு தகுந்தாற்போல் விலைகளும் நிர்ணயம் செய்யப்படுகின்றது. மணப்பாறை நகராட்சிக்கு அதிக தொகையை பெற்றுத் தருகின்ற ஒரே சந்தை மணப்பாறை மாட்டுசந்தை தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.




இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மணப்பாறை மாட்டு சந்தை நேற்று மாலை 4 மணிக்கு துவங்கி இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிவரை மாடுகள் விற்பனை நடைபெற்றது. கறவை மாடு, வண்டி மாடு, உழவுமாடு, வளர்ப்பு மாடு, ஜல்லிக்கட்டு காளைகள், கன்றுக்குட்டிகள் என விவசாயிகள் அதிகளவில் மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும், மணப்பாறை மாட்டு சந்தைக்கு வந்து செல்கின்றனர். இந்த வாரம் தீபாவளி பண்டிகையொட்டி  1000 ஆடு, 1500 மாடுகளும் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ஆடு குறைந்தபட்சம்ரூ 3500 முதல் 15 ஆயிரம் வரையும், கறவை மாடு குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விற்கப்படுகிறது. சுமார் 2 கோடி ரூபாய்க்கு தீபாவளி யொட்டி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.