திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கஞ்சா விற்பனை, போதை ஊசி விற்பனை, கள்ளத் துப்பாக்கி பதுக்கல் மற்றும் தயாரித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவர் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்டம் தோறும் தனிப்படைகள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் தொடர் கொலை,  பழிக்குபழி கொலை,  அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார், எச்சரிக்கை விடுத்திருந்தார். பொதுமக்களை அச்சுறுத்து வகையில் மீண்டும் தொடர் குற்றத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை 24 மணி நேரமும் கண்காணித்து அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டிருந்தார்.




இந்நிலையில் திருச்சி  மாவட்டம், திருவெறும்பூர் பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மே 19ஆம் தேதி ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அவரது வீட்டில் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரது கூட்டாளிகள் ஒன்பது பேர் கலந்து கொண்டனர்.  அந்த ஒன்பது பேரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 




இந்த நிலையில் இன்று திருச்சி மாவட்டம்,  சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் கொம்பன் ஜெகனை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது ஜெகன் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் காயமடைந்தார். மேலும் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக போலீசார் ஜெகனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஜெகன் உயிரிழந்தார்.


இதுகுறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.