திருச்சி மாநகரத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வங்கிகளில் இருந்து வெளியே வரும் மக்கள் மற்றும் தனியாக நடந்து செல்லும் பெண்கள், முதியோர்கள் என அனைவரிடமும் கத்தி மற்றும் அரிவாளை காண்பித்து மிரட்டல் விடுத்து அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகையை கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி,  அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் ஆயுதங்களை காண்பித்து பணத்தை கொள்ளையடிக்கும் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள்.


அதன்படி, கடந்த 12.09.23-ந்தேதி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலைமை தபால் நிலைய சிக்னல் அருகில் மளிகை கடை வியாபார பணமான ரூ.37,50,000/-த்தை பையில் வைத்து வங்கியில் செலுத்த ஆட்டோவில் சென்றபோது, ஆட்டோவை வழிமறித்து அரிவாளை காண்பித்தும், தடுக்க முயன்ற ஆட்டோ ஒட்டுனரை வெட்டி காயப்படுத்திவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தும் ஜாகீர் உசேன் வயது 19, த.பெ.அப்துல் ஆசாத் மற்றும் நான்கு நபர்களை கைது செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





மேலும், குற்றவாளி  ஜாகீர் உசேன் என்பவர் மீது எடமலைபட்டிபுதூர் காவல் நிலைய எல்லையில் இருசக்கர வாகனத்தில் வந்து தங்க சங்கிலியை பறித்த சென்றதாக 2 வழக்குகளும், அரியமங்கலம் காவல் நிலைய எல்லையில் 2 திருட்டு வழக்குகள் உட்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக தெரியவந்தது. எனவே, குற்றவாளி  ஜாகீர் உசேன் என்பவர் தொடர்ந்து திருட்டு, பணம் மற்றும் தங்கசங்கிலி பறித்து செல்லும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்ததால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் மேற்படி குற்றவாளியை  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும் திருச்சி மாநகரில் ஆயுதங்களை காண்பித்து வழிப்பறி செய்வோர் மீதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் யார் நடந்து கொண்டாலும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.