திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பதவி ஏற்றதிலிருந்து குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் பட்டியலை தயாரித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தலை மறைவாக இருக்கக்கூடிய ரவுடிகளை கண்காணிக்கவும் அவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக  கடந்த சில நாட்களாக தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள்,  பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் என அனைவரையும் அதிரடியாக போலீசார் கைது செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து ரவுடிகளை போலீஸார் கைது செய்து வருகிறார்கள். இது ரவுடிகள் மத்தியில் பெரும் பீதியையும், உயிர் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனையக்குறிச்சியை சேர்ந்த ஜெகன் (எ) கொம்பன் ஜெகனை போலீசார் என்கவுண்டர் முறையில் சுட்டு கொன்றதால் தம்மையும் போலீசார் சுட்டு கொன்று விடுவார்களோ என்ற பயத்தில் ரவுடிகள் உயிர் பயத்தில் உள்ளனர்.




இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள செல்வபுரத்தை சேர்ந்த சாமி கண்ணு மகன் விஷ்ணு (எ) வெங்கடேஷ் (29) இவன் மீது பணம் பறிப்பு, அடிதடி தகராறு என 10 வழக்குகள் உள்ள நிலையில், நேற்று திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் திருச்சி மேலகல்கண்டார் கோட்டை வ.உ.சி நகரை சேர்ந்த சுப்பையா மகன் சசிகுமார் (39). இவர் திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரிடம் ஏற்கனவே வெங்கடேஷ் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக வெங்கடேஷ் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதனை தொடர்ந்து நேற்று சசிகுமார் தனது சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த பொழுது வெங்கடேஷ் சிகுமாரை திட்டியதோடு எங்கிருந்தோ பிழைக்க வந்துவிட்டு என் மீதே புகார் கொடுக்கிறாயா எனக்கூறி ஆபாசமாக திட்டியதோடு தன் கையில் வைத்திருந்த வால் போன்ற கத்தியை காட்டி உன்னை இப்பொழுது கொலை செய்தால் என்ன செய்வாய் என கூறி மிரட்டி உள்ளான். இது சம்பந்தமாக சசிகுமார் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் மீண்டும் வெங்கடேஷ் மீது புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வெங்கடேஷ் மீது வழக்கு பதிவு செய்து வெங்கடேசை கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6ல் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து ரவுடிகள் கைது செய்யப்படுவதோடு அவர்கள் மீது போலீசார் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யும் சம்பவமும் அரங்கேறி வருவதால் ரவுடிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.