108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகப் போற்றப்படும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், 7 சுற்று மதில்களுடன் இக்கோயில் அமைந்துள்ளது. திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய ரங்கநாதரை, நெடுங்காலமாக பிரம்மதேவர் பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜைகள் செய்ய, சூரியன் நியமிக்கப்பட்டார். சூரிய குலத்தில் தோன்றிய ராமபிரானும், அயோத்தியில் இருந்த ரங்கநாதரை வழிபட்டு வந்தார். ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கு வருகை புரிந்த விபீஷணனுக்கு, ராமபிரான், தான் பூஜித்து வந்த ரங்கநாதர் சிலையை பரிசாக அளித்தார். விபீஷணன், இலங்கை திரும்பும் வழியில், சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணினார். ரங்கநாதர் சிலையை கீழே வைக்க விரும்பாத விபீஷணன், காவிரி ஆற்றங்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக் கூடாது என்று கூறிவிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்தார். ஆனால் அச்சிறுவன், ரங்கநாதர் சிலையைக் கீழே வைத்துவிட்டான். சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு வந்த விபீஷணன், சிறுவனைக் கடிந்து கொண்டார். தரையில் இருந்து மீண்டும் ரங்கநாதர் சிலையை எடுக்க இயலவில்லை.


இதனால் கலங்கிய மனநிலையில் இருந்த விபீஷணனுக்கு, அப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர் தர்மவர்மன் ஆறுதல் கூறினார். ரங்கநாதருக்கு காவிரிக் கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விருப்பம். அதனால் குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, விபீஷணன் இருக்கும் தென் திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டு அருள்வதாக உறுதியளித்தார். சிறுவனாக வந்தது விநாயகப் பெருமான் என்று கூறப்படுகிறது. அவரே மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். ரங்கநாதரின் விருப்பத்துக்கு ஏற்ப தர்மவர்மனும், இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டார். காலப்போக்கில் இக்கோயில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போனதாக கூறப்படுகிறது. மன்னர் தர்மசோழர் மரபில் வந்த கிள்ளிவளவன், இக்கோயிலை மீண்டும் அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. 




மேலும், ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு வெகு விமர்சையாக நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் 12ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது, பன்னிரண்டாம் தேதி பகல்பத்து விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பகல் 10 விழாவின் பத்தாம் திருநாளான மோகினி அலங்காரம் 22 ஆம் தேதியும் நடைபெறும். இராபத்து திருவிழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 23ம் தேதி அதிகாலை 4மணிக்கு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் இனிதே நிறைவடையும். ஆகையால் வரும் 23ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். மேலும்  இதன் முக்கிய நிகழ்வாக பரமபதவாசல் திறப்பு வரும் 23ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.




குறிப்பாக மாநகராட்சி சார்பில், ஸ்ரீரங்கம் பேருந்துகள் நிற்குமிடத்தில் பொதுமக்கள் பேருந்துகளில் வசதியாக ஏறவும், இறங்கவும் தடுப்புகள் அமைக்க வேண்டும். திருக்கோயில் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் ஸ்ரீரங்கம் நகரம் முழுவதும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதுடன், அந்த நாட்களில் 24 மணிநேரமும் குடிநீர் வழங்க வேண்டும். ஆங்காங்கே தற்காலிக குடிநீர்த் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். விழா நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கவும், மின்பழுது ஏற்பட்டால் உடனே நிவர்த்தி செய்ய தேவையான பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருத்தல் ஆகியவற்றில் மின்வாரியத்தினர் உரிய கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக மாநகராட்சி பள்ளிகள் ஒதுக்கீடு செய்து தரப்படும்.


இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் மற்றும் 24 மணி நேர மருத்துவ முகாம்களும் நடைபெறும். அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் மற்றும் மருத்துவ பணியாளா்கள் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் உடன் தயாா் நிலையில் இருத்தல் வேண்டும். பக்தா்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அலுவலா்கள் செய்து தர வேண்டும். அந்தந்த துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார்.