திருச்சியில் குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் முறையாக பராமரிக்க வேண்டுமென, பலமுறை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு விதிமுறைகளை முறைப்படி கடைப்பிடிக்காமல் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகளை ஆட்டோக்களில் அளவுக்கு மீறி ஏற்றி செல்வதால், பல இடங்களில் விபத்துக்கள் நடக்கிறது. இதுகுறித்து தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்ததன் அடிப்படையில், அரசு விதிமுறைகளை மீறி ஆட்டோ ஓட்டுநர்கள் பள்ளி குழந்தைகளை அதிக அளவில் ஏற்றி சென்றால், சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


அதே சமயம் குழந்தைகளின் நலன் மீது பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள், கால் டாக்ஸி போன்ற வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அளவுக்கு மீறி ஏற்றி சென்றால், புகார்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.




மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கூறுகையில், “பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட ஆய்வுக் குழு மூலமாக ஆய்வு செய்திட தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள் முழு உடல் தகுதியுடன் கூடிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர்களுக்கு தனி கிரில் அமைத்து பள்ளி குழந்தைகள் அவர் அருகில் செல்ல முடியாத அளவில் இருக்க வேண்டும். ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். பயணத்தின்போது கட்டாயம் உதவியாளர் இருக்க வேண்டும்.


பள்ளி வாகனத்தின் பின்புறம் பள்ளி நிர்வாகத்தின் தொலைபேசி எண் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தொலைபேசி எண், காவல் நிலைய தொலைபேசி எண், 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண் கட்டாயம் இருக்க வேண்டும், பள்ளி வாகனத்தின் படிக்கட்டுகள் அரசு நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி வாகனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். அவசர கால கதவு நல்ல நிலையில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.




மேலும் அவசர நேரத்தில் அந்த கதவை பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து விளக்கத்தை பயன்படுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் தெரியப்படுத்த வேண்டும். வாகனத்தில் வேசு கட்டுபாட்டு கருவி பொருத்தியிருக்க வேண்டும், மேலும் வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் தெளிவாக தெரியும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் வாகனத்தில் பொருத்த வேண்டும். ஓட்டுநர்கள் தீயணைப்பான் கருவிகள், முதலுதவி சிகிச்சை பெட்டகங்களை கட்டாயம் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.


கட்டாயம் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளை ஓட்டுநர்கள் செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் உயிர் என்பது விலைமதிக்க முடியாதது. எனவே ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும், கடமையுணர்வோடும் பணியாற்ற வேண்டும்” என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவுரை வழங்கினார்கள். 


இனி வரும் காலங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள், வேன்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை கவனமாக ஏற்றி செல்லவேண்டும். விதிமுறைகளை மீறினால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பெற்றோர்கள் அலட்சியமாக செயல்படாமல் குழந்தைகளின் நலன் மீது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.