சமூக வலைத்தளங்கள் என்பது ஒரு பொழுதுபோக்கு விஷயமே ஆகும். ஆனால் இளைஞர்கள், பெண்கள் சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். அதில் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை மட்டும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி விட்டனர். குறிப்பாக நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது ,டிக் டாக் செய்வது, போன்று விஷயங்களுக்கு அனைவரும் அடிமையாகி அதில் முழுமையாக மூழ்கி விட்டனர்.
இதிலிருந்து மீண்டு வருவது என்பது மிகவும் கடினமாக ஒன்றாக நிலவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிடுவது, நடனம் ஆடுவது, பாடல் பாடுவது போன்ற விஷயங்கள் பொழுதுபோக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவற்றுக்கு நாம் அடிமை ஆகினால் சில தவறான விஷயங்களில் மாட்டிக் கொள்வது இயல்பாகி விடுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி பல இடங்களில் ஆபாசமாக நடனம் ஆடுவது, போன்ற பழக்கங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேசமயம் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் அதிகமாக உள்ளது. சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்தினால் அனைவருக்கும் நன்மையை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
திருச்சி ரயில்நிலையத்தில் திரைபட பாடலுக்கு நடனம்
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் நடனம் ஆடுவதோ, பாடல் பாடுவதோ, டிக் டாக் செய்வது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் அவர்கள் பிரபலமாக ஆகிவிடலாம். குறிப்பாக திரைத்துறைக்கு எளிதாக சென்று விடலாம், என்ற மோகம் அனைவரும் மத்தியில் தற்போது இருக்கிறது. அதன் விளைவே பொது இடங்களில் நடனமாடி, அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக பலர் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு instagram-ல் திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் திரைப்பட பாடலுக்கு கவர்ச்சி உடையில் 3 பெண்கள் நடனமாடி வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். ரயில் நிலையம் மக்கள் பயன்படுத்தும் படிக்கட்டு மற்றும் சரக்கு ரயில் நிற்க்கும் போது நடைபாதை நடனமாடி வீடியோ பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ வைரலாகி பெரும் பேசும் பொருளாக மாறியது. பொது இடங்களில் தனிப்பட்ட முறையில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முறைப்படி அனுமதி பெற வேண்டும். குறிப்பாக பேருந்து நிலையம் ,ரயில் நிலையம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ,மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அனுமதி பெற்றே நடத்தப்படும் . ஆனால் இந்த இளம் பெண்கள் எந்தவித முன் அனுமதியும் இன்றி ரயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரயில்நிலையத்தில் நடனமாடிய 3 பெண்கள் கைது
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு சட்டத்தை மீறி நிலையத்தில் நடனமாடிய பெண்கள் யார் என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தீவிர விசாரணைக்கு பிறகு அந்த ரீல்ஸ் கடந்த 6 தேதி எடுத்ததும் ,3 இளம் பெண்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபர் ஆகியோர் திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இவர்கள் 4 பேரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள நடன பள்ளியில் பயின்று வந்ததும் தெரியவந்தது.
உடனடியாக இவர்கள் மீது திருச்சி ரயில்வே காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 145, 147 பிரிவின் கீழ் தடையை மீறி வீடியோ எடுத்தது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ரயில்வே காவல்துறையினர் அவர்களை அழைத்து பேசி இதுபோன்று செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என கண்டித்து அனுப்பியுள்ளனர். மேலும் பொதுமக்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என ரயில்வே துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தனர்.