திருச்சி மாவட்டம், முள்ளிக்கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். அவருக்கு, அருகில் உள்ள அந்தநல்லுார் ஒன்றியத்தைச் சேர்ந்த திருச்செந்துறை கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. அவசர தேவைக்காக, 1 ஏக்கர் 2 சென்ட் நிலத்தை, ராஜராஜேஸ்வரி என்பவருக்கு விற்க ஒப்பந்தம் செய்தார். 3.50 லட்சம் ரூபாய்க்கு கிரைய பத்திரம் ஏற்பாடு செய்து, அதை பதிவு செய்ய, கடந்த 2022 ஆம் ஆண்டு , திருச்சி மூன்றாம் எண் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். 


அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 'நீங்கள் பத்திரம் பதிய வந்திருக்கும் நிலம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. 'வக்பு வாரிய உத்தரவுபடி, இந்த பத்திரத்தை பதிய முடியாது.


சென்னையில் உள்ள வக்பு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்' என, சார்பதிவாளர் முரளி கூறியுள்ளார். அதற்கு ராஜகோபால், '1992ல் வாங்கிய என் நிலத்தை விற்க, வக்பு வாரியத்திடம் ஏன் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும்? என் கேட்டுள்ளார். 


திருச்செந்துறை மக்கள் நிலங்களை விற்கவும், வாங்கவும் தடை - வக்பு வாரியம்


அப்போது பதில் அளித்த சார்பதிவாளர் கூறியது..  திருச்சி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவுத் துறையைச் சேர்ந்த 12 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழ்நாடு வக்பு வாரிய தலைமைச் செயல் அலுவலர் ஏ.பி.ரபியுல்லா 11.08.2022 அன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மேலும், அந்தக் கடிதத்தில் கூறியிருந்தது..  திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பங்குளம், பெரியநாயகிசத்திரம், மண்ணச்சநல்லூர், திருச்செந்துறை, சித்தாநத்தம், கோமாகுடி, மணமேடு, பாகனூர் ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்து நிலங்களும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை. 


மேலும் இங்குள்ள நிலங்களை விற்பனை செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ, அடமானம் வைக்கவோ பத்திரப்பதிவுத் துறை அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது என தெரிவித்தார். இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். 


குறிப்பாக திருச்செந்துறை கிராமமே முழுமையாக வக்பு வாரியத்திற்கு சொந்தமானது , ஆகையால் அந்த இடங்களை அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் விற்க முடியாது என அறிவித்தனர். 


இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் அப்பகுதி மக்கள் சார்பாக தொடரப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது. 


இந்த சட்ட திருத்தம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது என திருச்செந்துறை கிராம மக்கள் தெரிவித்தனர்.




திருச்செந்துறை மக்கள் நிலங்களை விற்கவும், வாங்கவும் தடை இல்லை 


மேலும் இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தது.. .திருச்சி திருச்செந்துறை கிராமத்தில் 389 ஏக்கர் பரப்பளவில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடம் என முறையிடப்பட்டது. பத்திர பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.


இந்நிலையில் அப்பகுதி மக்கள் அனைவரும் தொடர் போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.


மேலும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில், திருச்செந்துறை கிராமத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை , நிலங்களை வாங்கவும், விற்கவும் செய்யலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


இதற்கு வக்பு வாரியம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.