திருச்சி மத்தியபேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் மதுபானம், கள்ளச்சாராயம் அருந்துவதாலும் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். பின்பு பொதுமக்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பேருந்தில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.


திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் மூலம் மதுபானம், கள்ளச்சாராயம் அருந்துவதினாலும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதினாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியானது திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களில் கலைக்குழுக்கள் மூலம்  நடத்தபட்டது. அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.




இதனை தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொதுமக்கள் மத்தியில் பேசியது...


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் உத்தரவின்படி, மதுபானம், கள்ளச்சாராயம் அருந்துவதினாலும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதினாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தான விழிப்புணர்வு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழச்சிகள் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தினை பொறுத்தவரை 262 பள்ளிகள் மற்றும் 62 கல்லூரிகளில் மாணவ, மாணவியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசியர்களை கொண்டு 'போதை மருந்து எதிர்ப்புக்குழு ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


மேலும், 2023 ஆண்டில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களால் போதை பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியாக கேம்பைன்
ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மாணவ , மாணவிகளால் ஜோதி (Anti drug Awarness Torch) நிகழ்ச்சி மற்றும் போதை பொருட்களினை பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதி மொழியும், அதேபோல் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 1200 மாணவர்கள் பங்கேற்பு செய்த மாரத்தான் போட்டியும், அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 500 மாணவ , மாணவிகள் பங்கேற்பு செய்த மாரத்தான் போட்டியும் நடத்தப்பட்டுள்ளது.




மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றி 500 மீட்டருக்குள் உள்ள கடைகளில் பான், குட்கா மற்றும் போதை தொடர்பான பொருட்கள் விற்கப்பட்டால் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடும் கடைகளினை நிரந்தரமாக மூடி சீல் வைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக 44 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 
அந்த இடங்களில் திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பம் செய்துள்ள 9 கலைக் குழுக்கள் மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக திருச்சி மத்தியபேருந்து நிறுத்தத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சி நவம்பர் மாதத்தில் 16.11.2023, 17.11.2023, 23.11.2023, 24.11.2023 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதத்தில் 14.12.2023, 15.12.2023, 21.12.2023 22.12.2023 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள், மாணவ,மாணவிகள் பார்த்து போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகளை குறித்து பிறருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என திருச்சி  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில், உதவி ஆணையர் (கலால்) உதயகுமார், கோட்ட கலால் அலுவலர், தனலெட்சுமி. மேற்கு வட்டாட்சியர் ராஜவேல், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.