இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளியை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையையொட்டி பணி நிமிர்த்தமாகவும், கல்விக்காகவும் வெளியூர்களில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையினை தங்களது தாய், தந்தை. அண்ணன், தம்பிகள், சகோதரிகள் உட்பட உறவினர்கள் அனைவருடன் ஒன்று சேர்ந்து கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இந்த பண்டிகைக்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் பெரும் பங்கு வகிக்கும் நிலையில் இதனை பொதுமக்கள் விரும்பி வாங்குவதும் வழக்கம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றது. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய் வாய்பட்டவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
மேலும், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது 23.10.208ம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என வும் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப் புணர்வு ஏற்படுத்த தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுற்றுச்சூழல்துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
மேலும், பட்டாசு வெடிக்க2 மணிநேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக தீபாவளி கொண்டாடினர்.
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி, மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், விதிமுறை மீறி பட்டாசு வெடித்ததாக ஜீயபுரம் காவல் சரகத்தில் 20, திருவெறும்பூரில் 8, லால்குடியில் 5, முசிறியில் 13, மணப்பாறையில் 9 என 55 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 55 பேரும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதேபோல் மாநகரில் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.