தெரிஞ்சுக்கோங்க அருமையான திட்டம்... அப்ளை செய்து நிதியுதவி பெறலாம்ங்க. என்ன விஷயம் தெரியுங்களா?
கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திட்டம், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திட்டம், காது கேளாத மற்றும் வாய்பேசாதோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம் உள்பட 2024-2025-ம் நிதியாண்டிற்கு 4 வகையான திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளதாவது: "கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், காது கேளாத மற்றும் வாய் பேசாதோர் நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த திட்டத்தில் திருமணம் முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கமும், தம்பதியரில் எவரேனும் ஒருவர் பட்டப்படிப்பு அல்லது பட்டய படிப்பு படித்தவராக இருந்தால் ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற தம்பதியர்களில் இருவருக்கும் அது முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை, திருமண அழைப்பிதழ் மற்றும் திருமண நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், கணவன்-மனைவி இருவரில் ஒருவர் நல்ல நிலையில் உள்ளார் என்ற மருத்துவ சான்று, குடும்ப அட்டையின் நகல், கல்வி சான்றின் நகல் மற்றும் தம்பதியர் இருவருக்கும் மணமாகவில்லை என்பதற்கான சான்று (இணையதளம் வாயிலாக பெற வேண்டும்) ஆகியவற்றுடன் https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த தகுதிகள் உங்களுக்கு இருக்கா. திருமணம் முடிந்து ஓராண்டுக்குள் இருந்தால் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறுங்கள். நிதியுதவி பெறுங்கள். தவற விடாதீங்க.