திருச்சி: காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் அறிவுறுத்தியுள்ளார். முக்கொம்பு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், திருச்சி மாவட்டத்தில் சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால்  திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று மாலையில் திருச்சியில் கனமழை பெய்தது. மேலும் முக்கொம்பு அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் காவிரி, கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், முக்கொம்பு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி, கொள்ளிடக் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


தொடர்ந்து பருவமழை பெய்து வருவதாலும், மேட்டூர் அணை முழு கொள்ளளவில் இருப்பதாலும், அணைக்கு வரும் நீர்வரத்தைப் பொறுத்து எந்த நேரத்திலும் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.


எனவே, காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் சலவைத் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஓட்டிச் செல்லவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தண்ணீரின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆற்று பக்கம் அனுப்ப வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவியது. இது, இன்று வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும்.


இந்த காற்றழுத்த தாழ்வு, ஏற்கனவே எதிர்பார்த்தபடி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையாததால், பல்வேறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 'ரெட் அலர்ட்' திரும்ப பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.