திருச்சி மாவட்டத்தில் கொட்டப்பட்டு மற்றும் வாழவந்தான் கோட்டை பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் அமைந்துள்ளன. கொட்டப்பட்டு முகாமில் 466 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த மறுவாழ்வு முகாமில் பல குடியிருப்புகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. தமிழக அரசு திருச்சி மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக 250 வீடுகள் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 100 வீடுகள் கட்டப்பட்டு முகாம் வாசிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இந்த முகாமில் சாக்கடை வசதி, சாலை வசதி, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்று இங்குள்ள முகாம் வாசிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக சாதாரண உபயோகத்துக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என கவலையுடன் தெரிவித்தனர். இதனால் குடிநீருக்கு வினியோகம் செய்யப்படும் காவிரி தண்ணீரையே இவர்கள் பாத்திரம் கழுவ, துணி துவைக்க, குளிக்க பயன்படுத்துகிறார்கள். கழிவறைக்கும் குடிநீரையே பயன்படுத்துகிறார்கள். இதனால் 4 மணி நேரம் வினியோகிக்கப்படும் குடிநீரை பிடிக்க குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக இங்குள்ள தமிழர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 






மேலும் இதுகுறித்து இலங்கை தமிழ் பெண்கள் கூறும்போது, இங்கு 466 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குள்ள வீடுகள் மிகவும் பழுதடைந்து உள்ளன. ஏதாவது பராமரிப்பு பணிகள் என்றால் நாங்களே மேற்கொள்ள வேண்டியுள்ளது. எங்களுக்கு 100 வீடுகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ள குடியிருப்புகளில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கிடையாது. 150 வீடுகளுக்கு ஒரு பொது குழாய் வைத்துள்ளனர். இதில் தான் நாங்கள் குடிநீர் பிடித்து வருகிறோம். குளிக்கவும், கழிவறைக்கும், துணிதுவைக்கவும் என்று வழங்கப்பட்ட தண்ணீர் 3 மாதமாக வரவில்லை. நெடுஞ்சாலைப்பணி நடைபெறுவதால், எங்களுக்கு வினியோகிக்க பதிக்கப்பட்ட தண்ணீர் குழாய் உடைந்து விட்டது என்று கூறுகிறார்கள். இதுபற்றி இங்கு வந்து செல்லும் அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக குடிநீரையே பிற பயன்பாட்டுக்கும் பயன்படுத்துகிறோம். இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் நாங்கள் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை ஆபத்தான முறையில் கடந்து சென்று அங்குள்ள பொது குழாயிலும் தண்ணீர் பிடித்து வருகிறோம். கடந்த 3 மாதமாக உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் தண்ணீர் பிடித்து வருகிறோம்.




குறிப்பாக எங்களுக்கு ஓட்டுரிமை இல்லாததால் மாநகராட்சி கவுன்சிலரும் கண்டுகொள்வதில்லை. 8 தலைமுறைகளாக இந்தியாவில் முகாம்களில் வசிக்கும் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்த பிள்ளைகளுக்கு இலங்கை அகதி என்பதால் பல இடங்களில் வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க மத்திய, மாநில அரசு உதவ வேண்டும்” என்று கூறினார்கள். இலங்கையில் வாழ்வாதாரம் இன்றி நம்மை நம்பி வந்துள்ள நமது உறவுகள் தண்ணீருக்காக அலைவதை பார்க்கும்போது, மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.