திருச்சி மாநகரில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி இருந்தனர். குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள், பெண்களை அச்சுறுத்தி நகை, பணம் கொள்ளை அடிப்பது, சாலையோரம் நடந்து செல்லும் மக்களிடம் இருந்து செயின் பறிப்பது மற்றும் பழிக்கு பழி வாங்கும் கொலை சம்பவங்கள், கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பதாகவும், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயனிடம் புகார் மனு அளித்திருந்தனர். அதன்படி திருச்சி மாநகரில் கடந்த 9 மாதங்களாக காவல்துறையினர் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சட்டத்துக்கு விரோதமாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 9 மாதங்களில் மட்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 890 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடும் ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தவர்களை கண்டறிந்து கடந்த 2020-ம் ஆண்டு 40 பேர் மீதும், 2021-ல் 85 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே நேரம் இந்த 9 மாதங்களில் மட்டும் 142 பேர் குண்டர் காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்த 170 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 651 நபர்கள் மீதும், லாட்டரி சீட்டு விற்பனை செய்த 90 பேர் மீதும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 115 பேர் மீதும், சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 1,124 பேர் மீதும் மற்றும் பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 9,857 பேர் மீதும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகரில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் குற்ற சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளது. திருச்சி மாநகரத்தில் சட்டம், ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள் வழிப்பறி குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.
இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் கூறுகையில், “மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து குண்டர் சட்டம், உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், தொடர் கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், எந்த ஒருபிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.