திருச்சி மாநகராட்சியில் கடந்த, 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. 6 ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய மேயராக தி.மு.க.வை சேர்ந்த அன்பழகன் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில்  மாநகராட்சியில் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்று   மேயர் அன்பழகன் அறிவித்தார். அதன்படி, இன்று காலை மாநகராட்சியில்  நடைபெற்ற  மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினர். மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர், எழுந்து நின்று மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். மேலும்  சாலையோர கடை வியபாரிகள் மேயரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இதில் திருச்சி மாநகராட்சியில் காய்கறி, பழம், சட்டி, பானை உள்ளிட்ட பல வகையான வியாபாரங்களை ஏழை, எளிய மக்கள் சாலையோரங்களில் செய்து வருகின்றனர். தரைக்கடை, தள்ளுவண்டிகளில் தொழில் செய்து வருகின்றனர். இவர்களிடம் மாநகராட்சி பெயரை பயன்படுத்தி சிலர் சட்ட விரோதமாக மிரட்டி பணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தனர்.



இதனை தொடர்ந்து  மாமன்ற உறுப்பினர்களோ, காவல் துறையினரோ, இதர துறையினரோ சட்டவிரோதமாக  இந்த  வியாபாரிகளிடம்  பணம்  வசூலில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு  யாரேனும் பணம் கேட்டு மிரட்டினால் என்னை தொலைபேசியில் (9952133422) தொடர்பு கொண்டு புகார் அளித்தால் அவர்கள் மீது மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கபடும் என மேயர் அன்பழகன் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு சார்பில் ஏழை  வியாபாரிகளுக்கு வழங்கப்படும். அடையாள அட்டையை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டார்.


இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் அன்பழகன் தெரிவித்தது,  இன்றைய தினம் பொதுமக்களிடம் குறை கேட்டு மனுக்கள் பெறப்பட்டது. முதியோர் உதவித்தொகை, பெயர் மாற்றம், வேலை வாய்ப்பு, குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் கேட்டு அதிகமாகி வருகின்றன என்றார். மேலும்  மாநகராட்சி கவுன்சில் கூட்டம் வருகிற 28ஆம் தேதி நடக்கிறது.  இதில் வார்டுகளில் இருக்கும் பிரச்சினைகளை கவுன்சிலர்கள் மூலம் அறிந்து நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். மாநகராட்சியை  குப்பை  இல்லாத மாநகராட்சியாக  மாற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. உடைந்த குப்பை தொட்டிகளை மாற்றிவிட்டு புதிய குப்பை தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.



சென்னைக்கு நிகராக திருச்சியை மாற்ற அமைச்சர் கே.என்.நேரு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்த மாநகராட்சி விரைவில் 300 சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம்  செய்யப்பட உள்ளது. இதனால் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் வரும். அந்த அடிப்படையில் மாநகராட்சியின் வருவாய் இன்னும் இரண்டு வருடத்தில் இருமடங்கு, மும்மடங்கு உயர வாய்ப்பு உள்ளது என்றார். அ.தி.மு.க. ஆட்சியில் தகுதி இல்லாதவர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுத்த காரணத்தினால் பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மண்டல தலைவர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதன்மூலம் சின்னச்சின்ன   அடிப்படைத் தேவைகளை அவர்களே நிறைவேற்றி தருவார்கள் என்றார். விரைவில் திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கபடும் என்றார்.