திருச்சி மாவட்டத்தில்  பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு கூட்ட தொடக்க விழா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு  திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலமுரளி வரவேற்று பேசினார். மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை ராஜராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் பேசியது.. தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த குழுவுக்கு அந்த பள்ளி மாணவ-மாணவிகளின் தாய் ஒருவர் தலைவியாக இருக்க வேண்டும். மாற்றுத்திறன் கொண்ட குழந்தையின் பெற்றோர் துணைத்தலைவர்களாக இருக்க வேண்டும் மீதம் 18 பேரில் 13 பேர் பெற்றோர்களாக இருக்க வேண்டும்.

இந்த குழு மாதம் ஒரு முறை கூடி பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 



 

மேலும் அத்துடன் தங்கள் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகளையும், இடைநின்ற குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களிடம் பெற்றோர் நண்பர்களாக பழக வேண்டும். இந்த பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 150 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். தற்போது, அது 1,300 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அரசு பள்ளிகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைதான் காரணம். இதுவரை பள்ளி செல்லாமல் இடைநின்ற 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு தான் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என்று நீங்கள் மாற்றி காட்டவேண்டும். அதற்கு பெற்றோர் ஒத்துழைப்பு தேவை. இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்பேரில் இந்த கூட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. 50 லட்சத்துக்கு மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 



 

 

திருச்சியில் 1,296 இடங்களில் நடைபெற்றுள்ளது. மாணவர்கள் தவறு செய்யும் போது, கட்டாயம் கண்டிக்கப்படுவார்கள். மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது ஒழுக்கமாக வர வேண்டும். ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் சம்பவங்கள் மிகவும் வருந்தத்தக்கது. இதுகுறித்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் ஹிஜாப் பிரச்சினை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் அரசு பள்ளிகளை பெருமையின் அடையாளமாக மாற்ற பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி க தெரிவித்துள்ளார்.