திருச்சி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டு வரைமுறைகளின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளிக்கு முன் மற்றும் பின்பு 7 நாட்களுக்கு என் 14 நாட்களுக்கு காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணித்து வருகிறது. அதன்படி, ஒலி மாசுபாடு அளவு தீபாவளிக்கு முன்பாக 18-ந்தேதியும், தீபாவளி பண்டிகையன்று தில்லைநகர் பகுதியில் எடுக்கப்பட்டது. 18-ந்தேதி தில்லைநகரில் ஒலி மாசு குறைந்தபட்சம் 57.5 டெசிபலும், அதிகபட்சமாக 69 டெசிபலும் கண்டறியப்பட்டது. தீபாவளியன்று தில்லைநகரில், குறைந்தபட்சம் 65.1 டெசிபலும், அதிகபட்சமாக 87.4 டெசிபலும் அளவிடப்பட்டது. இந்த அளவிடப்பட்ட ஒலி மாசு அளவுகள் தீபாவளியன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலி மாசுபாட்டின் அளவுகளை (பகல்-65 டெசிபல், இரவு-55 டெசிபல்) விட அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. தீபாவளியன்று, காற்றுத்தர குறியீட்டு அளவு குறித்து காலை 6 மணி முதல் மறுநாளான 25-ந்தேதி காலை 6 மணி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் காற்றுத்தர குறியீடு, 46-ல் இருந்து (மாசுபடாதது) 130 வரை (மிதமான மாசுபட்டது) என்று கண்டறியப்பட்டது. குறைந்த அளவாக உறையூரில் 111-ம், தென்னூரில் 130-ம் கண்டறியப்பட்டது. மாநகரில் பொதுமக்கள் பெருமளவில் பட்டாசுகளையும், வாண வெடிகளையும் அதிகம் வெடித்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. அன்று காற்றில் ஏற்பட்ட அதிகமான ஈரத்தன்மையும், காற்றின் மிகக்குறைந்த வேகமும் பட்டாசு வெடித்ததனால் ஏற்படும் புகை வான்வெளியில் பரவுவதற்கு ஏதுவான சூழ்நிலை ஏற்படவில்லை.




மேலும் இதுவே திருச்சி மாநகரத்தின் காற்றுத்தர குறியீட்டு அளவு இந்தாண்டு தீபாவளியன்று சற்று அதிகமானதற்கு காரணமாகும். வரும் காலங்களில் பொதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தீபாவளி பண்டிகையின் போது பின்பற்றி காற்றின் தரம் மற்றும் ஒலி மாசு அளவுமிகாமல் இருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இத்தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருச்சி இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில், தீபாவளி அல்லது அதற்கு முன் நகரில் மிதமான மழை பெய்து, காற்றின் தரத்தை மேம்படுத்தியது. இந்த ஆண்டு, பட்டாசுகளின் புகையை வெளியேற்றுவதற்கு வானிலை உகந்ததாக இல்லை என்று TNPCB மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிக அளவில் உயர் ரக பட்டாசுகளை வெடிப்பது, குறிப்பாக வான்வழி பட்டாசுகளை வெடிப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இனிமேல் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும் , இல்லை என்றால் காற்று, ஒலி மாசு ஏற்பட்டால் பாதிப்பு இயற்கைக்கு மட்டும் இல்லை, நமக்கும் தான் என அனைவரும் உணரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.