பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் சித்திரை மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து துணியால் வரையப்பட்ட அம்மன் கொடியினை அம்மன் பாதத்தில் வைத்து கோவில் குருக்கள் எடுத்து வந்தார். அதைத் தொடர்ந்து உற்சவர் அம்மன் மேள தாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

 



 


இதனை தொடர்ந்து 7.55 மணிக்கு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  அதைத்தொடர்ந்து கொடிமரத்துக்கு தீப ஆராதனை நடைபெற்றது இதில், கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். பின்னர் இரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போன்று, விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வருவார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும் திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும் அம்மன் பல்வேறு அலங்காரத்துடன் பக்கதர்களுக்கு காட்சி அளிக்கிறார். இவ்விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

 



 

மேலும் வரும்  18ஆம் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 20ஆம் தேதி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 21ஆம் தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 26ஆம் தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.