திருச்சி மாநகர், சிந்தாமணி காவிரிப் பாலம் பகுதியில் ஆற்றுக்குள் உள்ள மணல் திட்டுகளில் செவ்வாய்க்கிழமை மாலை இரண்டு முதலைகள் இருப்பதை சிலா் கண்டனா். இந்தத் தகவல் பரவியதையடுத்து பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்களில் சிலா் அவற்றை வேடிக்கை பாா்க்கக் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இதையடுத்து, கோட்டை காவல் நிலைய போலீசாா் அங்கு வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த வனம் மற்றும் தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். 




ட்ரோன் கேம்ரா மூலம் முதலை கண்காணிப்பு 


இதனை தொடர்ந்து, முதலைகள் நடமாட்டத்தை ட்ரோன் கேமிராக்களின் மூலம் கண்காணித்து அவற்றைப் பிடித்து வேறு இடங்களில் கொண்டு சென்று விடுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டனா்.


அப்போது மணல் திட்டில் இருந்த முதலைகளில் ஒன்று நீரில் இறங்கிச்சென்றது. மற்றொன்று அதே பகுதியில் நீரில் செல்வதும் திட்டில் ஏறுவதுமாக இருந்தது. இந்நிலையில் மாலை நேர இருள் சூழ தொடங்கியதால் முதலைகளை பிடிக்கும் திட்டத்தை வனத்துறையினா் கைவிட்டு அங்கிருந்து கிளம்பினா்.


இதன் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் உருவாக்கியது.பொதுமக்கள் அதிகளவில் புழங்கும் அப்பகுதிகளில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முதலைகளை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.