திருச்சியின் பல்வேறு அடையாளங்களுள் காவிரி பாலமும் ஒன்றாக திகழ்கிறது. இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் தூண்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1.35 கோடி, 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சம், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டது. தற்போது மீண்டும் இப்பாலம் சேதமடைந்துள்ளதால் நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பக்குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர். அப்போது இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்துள்ளது தெரியவந்தது. இதனால் பாலத்தை உடனடியாக சீரமைக்க ரூ.6.87 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம்  10-ந்தேதி முதல் பாலம் மூடப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 




மேலும் சீரமைப்பு பணிகள் 5 மாதத்தில் முடிக்கப்படும். எனவே இந்த பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் வழியே மாற்றி விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக காவிரி பாலத்தில் ஒருபுறம் மட்டும் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நாள்ளொன்று இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் கடந்து செல்கிறது. இதனால் பாலத்தில் மேலும் அதிர்வுகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.




இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “காவிரி பாலம் திருச்சி மக்களின் இன்றிமையாதது. தற்போது இந்த பாலத்தை முழுமையாக சீரமைக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு புறம் பணிகள் நடைபெறுகிறது, மற்றொருபுறம் இருசக்கர வாகனங்கள் செல்கிறது. இதனால் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக பாலம் மிகவும் வலு இழந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் சீரமைக்கும் பணிகள் நடைபெறுவது அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆகையால் காவிரி பாலத்தை முழுமையாக பலப்படுத்த வேண்டும் என்றால் போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்யவேண்டும். அப்போது தான் காவிரி பாலம் மீண்டும் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும்” என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.