தமிழகத்தில் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதுமே அரசு அலுவலகங்களின் கடமை. ஆனால் சில ஊழியர்களின் இதுபோன்ற தவறான நடவடிக்கையால் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தவறு செய்பவர்களை கண்டறியவும், அவர்களை கையும், களவுமாக பிடிக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி, லஞ்ச பேர்வழிகளை கைது செய்து வருகிறது. தொடர்ந்து புகார்கள் அதிக அளவில் வந்தன. இதனால் நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 60 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களிலும், சோதனை சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் பணப்புழக்கம் அதிகம் இருப்பதாக கருதப்படும் வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்து துறை (ஆர்.டி.ஓ. அலுவலகம்), உள்ளாட்சித்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட 12 துறைகளின் அலுவலகங்களை குறிவைத்து அதிரடி சோதனை நடந்தது. பெரும்பாலும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகுதான் லஞ்சப்பணம் அதிகம் கைமாறுவதாக கருதப்படுகிறது. இதனால் நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்த சோதனையில் நூற்றுக்கணக்கான லஞ்ச ஒழிப்பு துறையினர் களம் இறங்கினர். 




மின்வாரிய அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதன்படி திருச்சி தென்னூர் மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள பாலக்கரை, மலைக்கோட்டை, மகாலெட்சுமிநகர் ஆகிய பிரிவுக்குட்பட்ட உதவி மின்பொறியாளர் அலுவலகங்களில் நேற்று மாலை 5 மணி முதல் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்னவெங்கடேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த சோதனையில் அந்த அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.13 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட உதவி மின்பொறியாளர்கள் இன்று (வியாழக்கிழமை) திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல் புள்ளம்பாடியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 5.25 மணி வரை நடைபெற்றது. சோதனையின் போது, சார்பதிவாளர், தலைமை எழுத்தர், இளநிலை ஊழியர்கள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் எந்தவித பணமும் சிக்கவில்லை என்றனர்.