திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் சில பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் அரியவகை ஆமைகள் கடத்தி வரப்பட்டன. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த ஆமைகள் மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன்(வயது 30) என்ற பயணி கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தபோது, அதில் ஏதோ உருவங்கள் நகர்வது போன்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை தனியே அழைத்து சென்று, அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 47 அரியவகை பாம்புகள் மற்றும் 2 பல்லி வகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவை மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து முகமது மொய்தீனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருச்சி மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து பாம்புகள் மற்றும் பல்லிகளை சோதனை செய்து வருகின்றனர். அந்த பாம்புகள் மற்றும் பல்லிகளை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிகிறது. இதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்