திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 403 இந்திய நட்சத்திர ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் பயணிகள், தங்கம், வெளிநாட்டு பணம், அரிய வகை விலங்குகள், பறவைகள், போதைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கடத்தலை தடுப்பதற்கு சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லவிருந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது 2 பயணிகள் ட்ராலி பேக்கில் 403 இந்திய நட்சத்திர ஆமைகளை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள் திருச்சி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.