திருச்சியில் முதியவருக்கு அறிவால் வெட்டு


திருச்சி மாவட்டம்,  திருவானைக்காவல் 5 ஆம் பிரகாரத்தைச் சோ்ந்தவா் காஜாமைதீன் (63). சமையல் தொழிலாளி. இவா், சனிக்கிழமை இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்துள்ளாா். அவரை நோட்டமிட்ட மதுபோதையிலிருந்த மா்ம நபா்கள் 4 போ், காஜா மைதீனிடம் இருந்த பையையும், ரூ.1,400 ரொக்கத்தையும் பறித்துச் சென்றனா். இதில் ஒருவரைப் பிடித்த காஜாமைதீன், சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்க இழுத்துச் சென்றாா். அப்போது அவரை அந்த மா்ம நபா் அரிவாளால் வெட்டியுள்ளாா். இதைக்கண்ட புறக்காவல் நிலையப் போலீஸாா் அந்த இளைஞரை மடக்கிப் பிடிக்க முயன்றனா். இதையடுத்து, அவா் கையில் வைத்திருந்த அரிவாளை சுழற்றி ரகளையில் ஈடுபட்டாா். பின்னா் அவரைப் பொதுமக்கள் உதவியுடன் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.


இதில், ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதில் இளைஞா் காயமடைந்தாா். அதேபோல இளைஞரைப் பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளா்கள் ராஜா, பிரேம் ஆனந்த் மற்றும் அரிவாளால் வெட்டுப்பட்ட முதியவரும் காயமடைந்தனா். இதில் இளைஞா் மற்றும் வெட்டுப்பட்ட முதியவா் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். உதவி ஆய்வாளா்கள் முதலுதவி சிகிச்சை பெற்றனா். இதுதொடா்பாக கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.




 தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது


மேலும், ரகளையில் ஈடுபட்ட நபா் திருச்சி கோட்டை சிந்தாமணி அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்த எம். அபிஷேக் (23) என்பதும், வழிப்பறி செய்து தப்பியவா்கள் கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கே.குரு (20), காந்திமாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த அ.தவ்பிக் (19), அரியமங்கலத்தைச் சோ்ந்த எம். அபுபக்கா் சித்திக் (19) ஆகியோா் என்பதும் தெரியவந்தது. இதில் அபிஷேக் தவிர தப்பிச்சென்ற மற்ற 3 பேரையும் போலீஸாா் அதிரடியாக  கைது செய்தனா். அபிஷேக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் கைதுசெய்யப்பட்டு போலீஸாா் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறாா். திரைப்படத்தில் வரும் சம்பவம்போல இந்தச் சம்பவம் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில்  நடந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.


திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி எச்சரிக்கை


திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக காமினி பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சரித்திர பதிவேட்டில் இருக்கக்கூடிய நபர்கள் தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.