”திருச்சி விமான நிலையத்தில் சூப்பர் ஏற்பாடு” அப்படி என்ன செய்துள்ளார்கள் தெரியுமா..?

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தில் ஆட்டோக்கள் பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொள்ள விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளது பயணிகள் மகிழ்ச்சி அடைய காரணமாக மாறியுள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர்: மகிழ்ச்சி கண்ணா... மகிழ்ச்சி... விமானப்பயணிகள் செம மகிழ்ச்சி அடையும் விதமாக விமான நிலைய ஆணையம் அருமையான அனுமதி ஒன்றை அளித்துள்ளது. என்ன தெரியுங்களா?

Continues below advertisement

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தில் ஆட்டோக்கள் பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொள்ள விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளதுதான் பயணிகள் மகிழ்ச்சி அடைய காரணமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு, ஆட்டோக்கள் தூரத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனர். இனி அந்த நிலை இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த புதிய ஏற்பாட்டின்படி, ஆட்டோக்கள் வருகை பகுதிக்குள் சென்று, முனையத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் பயணிகளை இறக்கலாம். அங்கிருந்து பயணிகள் லிஃப்ட் மூலம் முதல் தளத்தில் உள்ள புறப்படும் இடத்திற்கு செல்லலாம். ஆட்டோக்கள் விமான நிலைய வளாகத்திற்குள் நுழையவும், வெளியேறவும் 30 நிமிடங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


முன்பு, ஆட்டோக்கள் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் இடத்தின் அருகே, அதாவது முனையத்திலிருந்து 800 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் தங்கள் உடைமைகளை சுமந்து கொண்டு அவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருந்தது. பயணம் செய்த களைப்பு, பொருட்களின் சுமை என்று ஆட்டோ ஏறுவதற்குள் பயணிகள் வெகுவாக அவதியடைந்து வந்தனர்.

இது தொடர்பாக திருச்சி எம்.பி., துரை வைகோ கூறுகையில், "இந்த நடவடிக்கை பயணிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மலிவான மற்றும் வசதியான வாய்ப்பை உறுதி செய்யும்" என்றார். இந்த அனுமதி விமான பயணிகளுக்கு மட்டுமின்றி ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக திருச்சி எம்.பி., துரை வைகோவிற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஆட்டோக்கள் புறப்படும் இடத்திற்கு செல்லும் வழியில் அனுமதிக்கப்பட மாட்டாது.

அவை வருகை பகுதியில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். ஒரு முறை வந்து செல்ல ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தை பயணிகளே செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ரூ. 40 என்பது விமான பயணிகளுக்கு பெரிய தொகை இல்லை என்பதால் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் கூறுகையில், "போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சீரான போக்குவரத்தை உறுதிப்படுத்தவும், பயணிகளை இறக்கிவிடும் இடத்தில் ஓட்டுநர்களை நியமிப்போம். ரயில் அல்லது பேருந்து மூலம் வந்து விமானம் பிடிக்க விரும்பும் பிற மாவட்ட பயணிகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அலுத்து சலித்து வரும் பயணிகளுக்கு அருகிலேயே ஆட்டோ கிடைப்பது வெயிலுக்கு ஒதுங்க நிழல் கிடைத்த மகிழ்ச்சி. இதனால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான் என்று தெரிவித்தனர்.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் இனி அதிக தூரம் நடக்க வேண்டியதில்லை. ஆட்டோவில் நேரடியாக டெர்மினலுக்கு வரலாம். குறிப்பாக ரயில் மற்றும் பஸ்ஸில் வரும் வெளியூர் பயணிகள் விமானம் பிடிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் ஆட்டோவில் சென்று விமான நிலையத்தை அடையலாம். விமான நிலைய ஆணையம்  இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முக்கியமாக கைக்குழந்தைகள் மற்றும் லக்கேஜ்களுடன் வரும் பெண்கள் அவதியடைந்து வந்த நிலையில் இந்த அனுமதி வரவேற்பை பெற்றுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola