திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுக்காப்பு துறை மற்றும் பள்ளிகல்வி துறை சார்பாக போதைப்பொருள் எதிர்ப்புகுழு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல்துறை ஆணையம் காமினி, மாவட்ட கல்விதுறை அலுவலர்கள், உணவு பாதுக்காப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு , 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
உலகத்தை இந்தியர்கள் ஆள வேண்டும் , அதில் நிச்சயம் தமிழர்கள் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் போதை பழக்கத்தை முற்றிலும் ஒழித்திட மாணவ, மாணவிகள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கடவுளே நேரில் வந்து சொன்னாலும் மாணவர்கள் தீமை செய்யக்கூடாது. மாணவர்கள் நினைத்தால் இந்த சமுதாயத்தை புரட்டிப் போட முடியும். ஒரு மாணவன் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலும் அவனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். ஆனால் ஒழுக்கம் இல்லாதவர்கள் இவ்வுலகில் எந்த சாதனையும் படைத்ததாக சரித்திரமே கிடையாது. மாணவர்கள் இந்த சமுதாயத்தில் இருக்கும் தீமைக்கும் ,தீய பழக்கத்திற்கும் அடிமையாகக் கூடாது. நமது தமிழர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள், எங்கு சென்றாலும் அவர்களை நாம் காண முடியும்.
இந்த உலகத்தில் சீனர்களுக்கும், இந்திகளுக்கும் கடுமையான போட்டி ,யார் உலகத்தை ஆளப்போவது என்று. ஆனால் சீனர்களை விட இந்தியர்கள் அதிக அளவில் சாதனை படைத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் சீனர்கள் தங்களுடைய பழக்கவழக்கங்களையும், கல்வி முறையையும் மேம்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த உலகத்தை ஆளப்போவது நிச்சயம் இந்தியர்கள் தான். அதில் குறிப்பாக தமிழர்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
போதை பொருள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - எந்த எல்லைக்கும் செல்வோம் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவில் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் நாம் மீட்க வேண்டும் புதிய சமுதாயத்தை படைக்க வேண்டும்.
போதை பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். எவர் ஒருவர் எதற்கெடுத்தாலும் காரணம் சொல்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெற முடியாது.
திருச்சி மாவட்டத்தில் சுமார் 30,000 மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. அனைத்து கடைகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு உத்தரவை மீறி கடைகளில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 8 போதைப்பொருள் எதிர்ப்பு புழுக்கள் அமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 250 கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை இன்று முதல் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு மாணவர்களும் ஒரு குழுவுக்கு சமமானவர்கள், போதை பொருளை விற்பனை செய்யும் கடைகள் பற்றி மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கும் மாணவர்கள் அல்லது பொதுமக்கள் யாராக இருந்தாலும் அவர்களை பற்றிய விவரங்கள் பாதுகாக்கப்படும்.
போதைப்பொருள் விற்பனை பற்றி அதிக தகவல் கொடுத்தால் ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் இருக்கை வழங்கப்படும்.
போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக திருச்சியை உருவாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்.போதைப்பொருள் குறித்து அதிக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் இருக்கை வழங்கப்படும். அன்று ஒரு நாள் அவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நான் செயலாற்றுவேன் என தெரிவித்தார்.
நேற்று இரவு 11 மணி அளவில் கிடைத்த தகவல் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உடன் பச்சமலை பகுதியில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டோம். அப்போது 250 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டறியப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து இனிவரும் காலங்களில் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட இந்த பகுதியில் உருவாக்கவோ, விற்பனையோ செய்யக்கூடாது என உறுதிமொழி ஏற்க வைத்தோம். மேலும் அப்பகுதியில் திருமண மண்டபம் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த பகுதியில் கள்ளச்சாராயம் இல்லை என்ற நிலையை உருவாக்கினால் நிச்சயம் திருணம் திருமண மண்டபம் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளேன்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் போன்று இனி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது. பள்ளி , கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இருக்கக்கூடிய கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
தகவல் தெரிவிப்பதற்காக இலவசமாக புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது அதை அனைவரும் மனதில் வைத்துக்கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
போதை பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒழித்து, நம் மாநிலத்தையும், சமுதாயத்தையும் காப்பாற்றும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. அதை நினைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.