திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிறை காவலர்களுக்கு 7 மாத அடிப்படை பயிற்சியை சிறைதுறை மற்றும் பயிற்ச்சி காவல்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் துணைத் தலைவர் ஜெயபாரதி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறைத்துறை இயக்குனர் பேசுகையில், "நம் எல்லோருக்கும் நன்றாக தெரியும் அரசாங்கப் பணி கிடைப்பது என்பது எவ்வளவு கடினமானது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இன்றைய காலகட்டத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைப்பது எளிதானது இல்லை. எனவே இந்த வேலையை மிக பொறுப்புடனும் கண்ணியத்துடனும் செய்ய வேண்டும். ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் மட்டுமே ஒரு காவலரின் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவார். அதன் பின் நீதிமன்றம் குறிப்பிடும் நாள் வரை வருட கணக்கில் இந்த சிறைக்குள் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள்.
ஒரு குற்றவாளி சிறைக்குள் வருவது தண்டனைக்காக மட்டுமல்ல அவர் திருத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் தான், எனவே குற்றவாளிகளுடன் அதிக நேரம் செலவிடும் உங்களைப் போன்ற காவலர்கள் தான் அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியும். அவர்களோடு அதிக அளவில் கலந்துரையாடி அவருடைய பிரச்சனைகளை புரிந்து கொண்டு நீங்கள் பணியாற்றினால் சிறைக்காவல் துறை மிக சிறப்பாக செயல்படும்.
எனவே உங்களுடைய பணி அந்த அளவிற்கு மிக முக்கியமான பணி என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். ஒரு கொலை குற்றவாளியை கைது செய்யும் காவல்துறை அந்த கொலை குற்றவாளி எப்படி கொலை செய்தார் என்பது குறித்து முழு விவரங்களையும் தகவல்களையும் சேகரித்துக் கொண்டு அந்த குற்றவாளி குறித்த எதிர்மறையான எண்ணம் அவர்களுக்குள் இருப்பதால் அந்த குற்றவாளியை திருத்துவதற்கான முயற்சிகளை எடுக்க மாட்டார்கள். ஆனால் எந்த குற்றப் பின்னணியும் தெரியாத சிறைகாவலர்கள் அவர்களுடன் பேசும்போது அவர்கள் செய்த குற்றத்தின் தன்மை அவருடைய மனநிலை அனைத்தையும் புரிந்து கொண்டு அவர்களை திருத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். சிறையில் தண்டனை அனுபவிக்க கூடியவர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை. அவர்களுடைய சூழ்நிலை அவர்களை குற்ற வழியாக மாற்றி உள்ளது.
எனவே இந்த சிறைத் துறையில் பணியாற்றக்கூடிய சிறை காவலர்கள் மற்றும் பயிற்சி முடித்து புதிதாக பணியில் சேர உள்ள சிறை காவலர்களாகி நீங்கள் இந்த பயிற்சி காலத்தில் பெற்றுக் கொண்ட பயிற்சியை தாண்டி நேரடியாக சந்திக்கப் போகும் சவால்கள் தான் அடுத்த கட்ட நகர்விற்கு உங்களை கொண்டு செல்லும்.
மேலும் பயிற்சியில் ஈடுபடும் ஒவ்வொரு வரும் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். அதே சமயம் உங்களுடைய உடலும் எப்போதும் நல்ல வலிமையுடன் இருக்க வேண்டும். பயிற்சி காலத்தின் போது உங்களுடைய உடலை பராமரிப்பவர்கள் பயிற்சி முடிந்து பணிக்கு சேர்ந்தவுடன் தங்களுடைய உடல் நிலையில் கவனம் செலுத்துவதில்லை. எனவே இது போன்ற நிலைகளை மாற்றிக் கொண்டு பணியாற்ற வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் பயிற்சி காலத்தில் சிந்தும் ஒவ்வொரு வியர்வை துளிகளும் போரில் ஒரு வீரன் வெற்றி பெறுவதற்காக சிந்தும் ரத்த துளிகளுக்கு சமமானதாக உள்ளது. இது ராணுவம் காவல்துறை சிறைத்துறை என அனைத்து துறைகளுக்கும் பொருந்தும், இந்த சீருடைப் பணியானது காலை 9 மணிக்கு விட்டு மீண்டும் ஐந்து மணிக்கு செல்வது அல்ல 24 மணி நேரமும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.
எனவே உங்களுடைய சேவையை இந்த சிறை குற்றவாளிகளுக்கு செலவழித்து அவர்களை நல்வழி படுத்துவதற்கான பணியாக அமைய என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்" என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பயிற்சி முகாமில் உள்ள பயிற்சி காவலர்கள் தங்கும் விடுதி மற்றும் சமையல் அறை உள்ளிட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். இறுதியாக மத்திய சிறையின் முதல்வர் மற்றும் சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் நன்றி உரையாற்றினார்.